கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு சமையல் உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு..!

கோவையில் இருந்து துபாய், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சமையல் உபகரணங்கள் மாதந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரான கோவை மாவட்டம் சமையல் உபகரணங்கள் தயாரிப்பிலும் உலகளவில் சிறந்து விளங்குகிறது. ஹோட்டல், கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சமையல் கூடங்களுக்கு தேவையான பலவகையான சமையல் உபகரணங்கள் கோவையில் தயாரிக்கப்படுகின்றன.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சமையல் உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு கோவையில் இருந்து மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை சமையல் உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் செல்வராஜ் கூறியதாவது, சமையல் உபகரணங்கள் தயாரிப்பில் கோவை சிறந்து விளங்குகிறது.

டில்டிங் கிரைண்டர், காய்கறிகள், வெங்காயம் வெட்டும் இயந்திரங்கள், உருளைக்கிழக்கு தோல் உரிக்கும் இயந்திரம், தேங்காய் துருவல் உள்ளிட்ட பல வகையான சமையல் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

வழக்கமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கல்லூரி விடுதிகளுக்கு அதிகளவு உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது வளைகுடா நாடுகளில் கட்டுமான திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்படுகின்றன.

இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில் தற்காலிக சமையல் கூடங்கள் நிறுவப்படுகின்றன. அதற்கு தேவையான உபகரணங்களுக்கு கோவையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கட்டுமான திட்டங்கள் ஓராண்டு, இரண்டாண்டு அல்லது திட்டம் எப்போது முடிகிறதோ மறுதினமே அங்கு அமைக்கப்பட்ட சமையல் கூடங்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஸ்கிராப்(பழைய பொருட்கள்) என கழிவுபொருட்களாக கருதப்படும். ஒவ்வொரு கட்டுமான திட்டத்துக்கும் தற்காலிக சமையல் கூடங்கள் புதிதாக அமைக்கப்படும்.

புதிய கட்டுமான திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படுவதால் கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ந்து பணி ஆணைகள் கிடைக்கப்படுகின்றன. பெரும்பாலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு உபகரணங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவையில் இருந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுக நகரங்களுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து கொள்கலன்கள் உதவியுடன் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மாதந்தோறும் பல நுாறு கோடி மதிப்பிலான உபகரணங்கள் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...