ரயில்வே துறைக்கு பொருட்கள் தயாரித்து வழங்குவதில் புதிய நடைமுறை அமல் - கோவையை சேர்ந்த 300 தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

கோவை ரயில்வே துறைக்கான சிக்னல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கோவையில் உள்ள 300 உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உற்பத்தி பிரிவின்கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பம்ப்செட். கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வேதுறையின் தேவையை பூர்த்தி செய்வதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ரயில்வே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே துறையில் வழக்கமான டெண்டர் நடைமுறையில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் கோவையில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் (RASA) தலைவர் சுருளிவேல் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ரயில்வேதுறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

சிக்னல்களுக்கு பயன்படுத்தப்படும் பாயின்ட் மெஷின், ரிலே, தானியங்கி கேட்களுக்கு பயன்படுத்தப்படும் பூம் என்ற பொருட்கள் உள்ளிட்டவை தயாரித்து வழங்கப்பட்டு வந்தன.

மேலும் தண்டவளாங்களுக்கு தேவையான ஓபன் லைன் பொருட்கள், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவை கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களாகும். இதை தவிர்த்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வழக்கமாக அடுத்த ஆண்டுக்கான டெண்டர் நவம்பர், டிசம்பரில் வெளியிடப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொருட்களை ரயில்வே துறைக்கு விநியோகிக்க தொடங்குவார்கள்.

இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும் டெண்டரில் பங்கேற்று பணி ஆணை பெற அனுமதி பெறும் நிறுவனங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு மட்டுமின்றி 2024ஆம் ஆண்டு வரை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கையால் நடைமுறையில் பல சிக்கல்களை தொழில் முனைவோர் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இன்று காணப்படும் மூலப்பொருட்களின் சந்தை விலையை கொண்டு 2024-வரை எவ்வாறு பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்து வழங்குவது.

தவிர தற்போது பாதுகாப்பு முதலீட்டு நிதி மொத்த பணி ஆணை மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. புதிய நடைமுறையால் நிதிச்சுமையும் அதிகரிக்கும். 2 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை பாதித்துள்ள காரணத்தால் ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை விரைவில் நேரில் சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...