கோவையில் தங்க நகை விற்பனை வரலாறு காணாத சரிவு; முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் குறைவு..!

கடும் விலை ஏற்றம், இறக்குமதி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆண்டை விட தங்க நகை விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக, கோவை நகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை: உலக அளவில் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நாடு இந்தியா. அதுவும், இந்தியாவில் தங்க நகை வர்த்தகத்தில், கோவை தவிர்க்க முடியாத நகரம் என்றால் அது மிகையாகாது.

தங்கநகை வர்த்தகத்தில் முதல் மூன்று நகரங்களில், ஒன்றான கோவை தற்போது தங்க நகை விற்பனையில் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவது, நகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கொடிகட்டி பறந்த தங்க வர்த்தகம் தற்போது தலைகீழாக மாறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து நகை உற்பத்தியாளர் சங்க தலைவர், முத்து வெங்கட்ராமன் நம்மிடம் பல்வேறு விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.



"தங்க நகை தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கோவையில் தயாரிக்கப்படும் தங்க, வைர ஆபரணங்களுக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மார்க்கெட்டுகளிலும் ஒரு தனி மவுசு உண்டு. குறிப்பாக ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தங்க நகை விற்பனையை பொருத்தவரையில் கோயம்புத்தூரில் வழக்கமாக நாளொன்றுக்கு 200 கிலோ அளவு விற்பனையாகும். இவை நேரடியாக தங்கத் தகடுகளாக இல்லாமல் ஆபரணங்களாகவே விற்பனையாகி வருகின்றன. தற்போது, பல்வேறு காரணங்களால் கோவையில் தங்க நகை விற்பனை வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வருகிறது.

இதற்கு முதன்மையான காரணம் தங்கத்தின் விலை ஏற்றம். இந்த விலை ஏற்றம், தங்க நகை விற்பனையை நேரடியாக பாதித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இப்படி தங்க நகை வணிகம் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவதற்கு வேறு முக்கிய காரணிகள் - இறக்குமதி உயர்வு 10 முதல் இருந்து 15 சதவீதமாக உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொதுமக்களிடம் சேமிப்பு குறைவு மற்றும் பணப்புழக்கமின்மை ஆகும்.

இவை, தங்க நகை நுகர்வோரை கடுமையாக பின்னுக்கு தள்ளியுள்ளது. இதே நிலை நீடித்தால், கோயமுத்தூர் தங்க நகை வர்த்தகத்தில் தனது தனித்துவமான இடத்திலிருந்து விலகும் அபாயம் ஏற்படும்.

ஒரு புறம் வணிக பாதிப்பு என்றால் ஒரு புறம் வேலை வாய்ப்பு பாதிப்பு. தங்க நகை தயாரிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளோர் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், மாதத்தில் 15 நாட்களுக்கு மட்டுமே தங்க நகை தயாரிக்கும் பணியில் உள்ள பொற்கொல்லர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பதே நிதர்சனம்.

கோயம்புத்தூரில் மொத்தமாக 626 நகை கடைகளில் மற்றும் 45 ஆயிரம் நகை பட்டறைகளில் குடிசை மற்றும் சிறு, குறு தொழில் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில், தங்க நகை விலை ஏற்றம் மற்றும் விற்பனை குறைவு இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.



எனவே, லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு இறக்குமதி வரியை குறைக்கவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கவும், தங்கம் நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கோரிக்கையை முன்வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...