அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த முயன்றால் சாகும் வரை உண்ணாவிரதம் - அண்ணாமலை

தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயன்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஒன்றியங்களில் தொழில் பூங்கா அமைக்க சுமார் 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் ஓதிமலை சாலையில் தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று பாஜக விவசாயிகள் அணித்தலைவர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க விவசாயிகள் பிரிவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கண்டன உரையில், அன்னூர் பகுதியில் 3,867 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழிற்பேட்டை அமைக்க தரிசு நிலம் என்று பொய் சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள்.

தி.மு.க. வினருக்கு நேரடியாக வர தெரியாது. கொள்ளை புறம் வழியாக வருவது தான் அவர்களது வழக்கம். விவசாயிகள் பற்றி புரிந்து கொண்டவர் காமராஜர் மட்டுமே. அவர்தான் பல அணைகளைக் கட்டி விவசாயிகளை வாழ வைத்தார். ஆனால், இப்போது அடி முட்டாள்கள் சேர்ந்து கோபாலபுரத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அன்னூர் விவசாயிகள் யாரும் பணக்காரர்கள் ஆக விரும்பவில்லை, என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் கணக்குப்படி தமிழகத்தில் 48,195 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகள் அமைக்க கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தி உள்ளனர். ஆனால், அங்கு இதுவரை ஒரு நிறுவனம் கூட வரவில்லை. தற்போது திடீரென அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. தண்ணீரை வியாபாரம் செய்ய தான் தற்போது படையெடுத்து வந்துள்ளனர். திராவிட மாடல் அரசிற்கு தேவை நிலம் இல்லை. அவர்கள் தண்ணீருக்காக தான் வருகிறார்கள்.

ஜி ஸ்கொயர் என்ற ஆளும் கட்சியின் நிறுவனம் அரபு நாடுகளுக்கு சென்று 578 கோடி பணம் கொடுத்து ரேகிண்டோவிற்கு சொந்தமான பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நிலத்தை வாங்கியுள்ளனர். தி.மு.க. வின் பாதிப்பணம் ஜி ஸ்கொயருக்கு தான் செல்கிறது அதற்காகத்தான் தி.மு.க வேலை செய்து வருகிறது. நிலங்களை அபகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நிலத்தை எடுத்துக் கொடுக்கின்றனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு அந்த பணத்தை டாஸ்மாக் மூலம் வசூலிப்பது தான் திராவிட மடல் அரசு. சென்னை முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சரிடம் கழகத் தலைவன் படம் பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். இது வெட்கக்கேடானது.

பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்டவுள்ளனர். 80 வயது ஆனாலும் 80 படம் எடுத்தாலும் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார். கழகத் தலைவன் படத்தில் நடிக்க அவர் காக்கி சட்டையை வாடகைக்கு எடுத்து போட்டு உள்ளார். நான் பத்து ஆண்டுகள் காவல்துறையில் வேலை செய்தவன் காக்கி சட்டை அணிய ஒரு தகுதி வேண்டும். படத்தில் வேண்டுமென்றால் மக்களின் காவலனாக காட்டிக் கொள்ளலாம்.



தி.மு.க கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கேரளா அரசு தேனி மாவட்டத்திற்குள் சர்வே நடத்திக் கொண்டிருக்கின்றனர். நமது 80 ஏக்கர் விவசாய நிலத்தை கேரளா அரசு எடுத்துக் கொண்டது. 

2024 இல் துணைப் பிரதமர் பதவி கிடைக்குமா என்ற நப்பாசையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேனி மாவட்ட விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொடுத்து விட்டார்.

காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்தவர்கள் தி.மு.க இதுவரை கூறிய பொய்யை உணர்ந்துள்ளனர். பொய் அரசியலை 70 ஆண்டு காலமாக செய்து வந்ததை காசி தமிழ் சங்கம் காலி செய்து விட்டது. மத்திய அரசுக்கு போட்டியாக தமிழக அரசு காசிக்கு 200 பேரை அனுப்புகிறது. அவர்களை குளிர்காலத்தில் அனுப்பாமல் கடும் வெயில் காலத்தில் அனுப்புங்கள்.

டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டைப் பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். அவர் அன்னூரில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என்று கூறியுள்ளார். தைரியம் இருந்தால் அன்னூரில் இருந்து ஒரு பிடி மணலை எடுத்துப் பார்க்கட்டும். தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசு இல்லை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசு. அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயன்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் அடிமைகள். தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதைப் பார்த்து அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 பா.ஜனதா எம்.பி. க்கள் தேர்வு செய்யப்படுவது உறுதி, இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை அன்னூர் வருகை ஒட்டி அவரை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் புராணக் கதைகளில் வருவோர் இடத்தில் கையில் துப்பாக்கி, எம்.ஜி.ஆர் வேடத்தில் அண்ணாமலை சாட்டையை சுழற்றும் போஸ்டர, தமிழக முதலமைச்சர் அண்ணாமலை என்ற வாசகம் அடங்கி போஸ்டர் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...