இலவச செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

அனலாக் நிலுவைத் தொகை கோருவதை நிறுத்தவும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு.


திருப்பூர்: தமிழக அரசின் சார்பில் கடந்த 02.09.2011 ஆம் தேதி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் (TACTV) துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் அரசு கேபிள் டிவியில் சுமார் 24 ஆயிரத்து 619 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களாக (LCO) பதிவு செய்திருந்தனர்.

இந்த சூழலில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் டிவியில் டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ் வழியாக மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தது.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போது அரசு கேபிள் டிவி விலை இல்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கியது ஆபரேட்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்(LCO) தலையில் இடி விழுந்ததைப் போல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் செயல்பாடு இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனலாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறை துவக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அனலாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை உள்ளதாக கூறி காவல்துறை மூலமாகவும் வருவாய் துறை மூலமாகவும் காலம் கடந்து ஆபரேட்டர்களை துன்புறுத்தி கடன்காரனை போல் அரசு அதிகாரிகள் சித்தரிப்பது மன வேதனை அளிக்கிறது.

அரசு கேபிள் டிவியில் பதிவு செய்த பல்லாயிரம் ஆபரேட்டர்களுக்கு ஒளிபரப்பு வழங்காமலேயே நிலுவைத் தொகை உள்ளதாக தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஆபரேட்டர்களை துன்புறுத்துவது முறையற்ற செயல்.

ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ் வாங்கும்போது வைப்புத் தொகையாக பாக்ஸுக்கு 300 வீதம் செலுத்தியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 2017-ல் வழங்கப்பட்ட செட் டாப் பாக்ஸ்கள் தொலைக்காட்சிகளிலும் (டிவி) தின நாளிதழிலும் தமிழக முதல்வரால் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டது,



ஆனால், தற்போது செயலாக்கம் இல்லாத பாக்ஸ்களுக்கு ரூபாய் 1800 வீதம் ஆபரேட்டர்களிடம் வசூலிப்பது நியாயமற்ற செயல். மேலும் இது வாடிக்கையாளர்களுக்கும் ஆபரேட்டர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



அப்போது அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்வதுடன், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.



மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒன்று திரண்டதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது..

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...