அன்னூர் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது - கோவையில் எம்.பி. ஆ. ராசா

தனியார் கம்பெனிகளிடம் இருக்கும் நிலங்களை மட்டும் தான் தொழில் பூங்கா அமைக்க எடுக்கப்படும். விவசாயிகளின் நிலங்கள் எக்காரணம் கொண்டும் எடுக்கப்படாது. மக்களிடம் ஏற்பட்டுள்ள தேவையற்ற அச்சத்தை போக்க இன்றோ நாளைய அரசு அறிவிப்பு வெளியிடப்படும், என்றார்.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டம் அன்னூர் ஓன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ சார்பில் தொழில் பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில், விவசாய விளைநிலங்களை எடுக்கப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொகுதியின் எம்.பி என்ற முறையில் தொழில்துறை அமைச்சர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மக்களிடம் ஏற்பட்டுள்ள தேவையற்ற அச்சத்தை போக்க வேண்டிய கடமை எம்.பி.என்ற முறையில் எனக்கு உள்ளது. தொழிற் பேட்டையில் அமையவுள்ள நிறுவனங்கள் மாசு வெளியேற்றும் நிறுவனங்கள் அல்ல. மேலும், அந்த பகுதியில் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தனியார் கம்பெனிகளிடம் தான் உள்ளது. மற்ற இடங்கள் தான் விவசாயிகளிடம் உள்ளது.

தனியார் கம்பெனிகளிடம் இருக்கும் நிலங்களை மட்டும் தான் தொழில் பூங்கா அமைக்க எடுக்கப்படும். விவசாயிகளின் நிலங்கள் எக்காரணம் கொண்டும் எடுக்கப்படாது. விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு நிலமும் எடுக்கப்படாது. மாசு படுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் அமையாது. எனவே, விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.

50 கோடிக்கு அதிகமான முதலீட்டுடன் துவங்கப்படும் தொழில் நிறுவனங்கள் மத்திய அரசு அனுமதியுடன் தான் அமைக்க முடியும். மத்திய அரசை மீறி பெரிய தொழில்சாலைகள் எதுவும் வந்து விடாது. தொழில்சாலைகளுக்கு அமைச்சர்களால் அனுமதி கொடுக்க முடியாது, அதற்கு தொழில் நுட்ப குழிவினரால் மட்டுமே அனுமதி அளிக்க முடியும். அதேபோல,

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு மட்டுமே கொடுக்க முடியும்.

இந்த விவகாரத்தில் அரசு பின்வாங்க வில்லை. இருக்கும் நிலங்களை வைத்து 800 முதல் 1500 ஏக்கருக்கு தொழில் பேட்டை அமைக்க அரசு தயாராக இருக்கின்றது.

நாங்குநேரியில் தொழில் பேட்டைகள் அமைக்க தொழில் முனைவோர் விரும்பவில்லை என தெரிவித்த அவர், ஏன் நாங்குநேரியில் தொழிற்சாலைகள் அமைக்கவில்லை என தொழில் முனைவோரிடம் கேட்க முடியாது.

அன்னூர் விவகாரத்தில் தரவுகள் இல்லாமல் போராட்டம் நடந்தால் அது உள்நோக்கத்துடன் நடத்தப்படுவது என அர்த்தம்.விவசாயிகளின் எதிர்ப்பிற்கு தகுந்த காரணம் இருக்குமானால் நாங்கள் மக்கள் பக்கம் இருப்போம்.

டிட்கோ குறித்து அன்னூர் பகுதி விவசாயிகள் ஏற்கனவே என்னை சந்தித்தார்கள். விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலங்கள் எடுக்கப்படாது என அவர்களிடம் உறுதியளித்துள்ளேன். அன்னூர் பகுதியில் அமையும் தொழில் பூங்காவில் உள்ளூர் நபர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாரிசு அரசியல் என்ற விமர்சனம் இருக்கும் என தெரிவித்த அவர், திமுக தத்துவார்த்த ரீதியான இயக்கம், உதயநிதிக்கு நிர்வாகம் செய்யும் தகுதி இருக்கும் என நம்புகின்றோம்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் சொல்வதை வரவேற்கின்றேன், ஆனால் அவர் அதை நிருபிக்க வேண்டும், இவ்வாறு நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...