கோவை - துபாய் இடையே விரைவில் புதிய விமான சேவை: எம்பி சண்முகசுந்தரத்தின் நடவடிக்கைக்கு தொழில் துறையினர் வரவேற்பு

கோவை விமான நிலையம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரத்தின் செயல்பாடுக்கு கோவை மாவட்ட தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை விமான நிலையம் கொங்கு மண்டலத்தின் கீழ் வரும் ஏழு மாவட்ட மக்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010-ம் ஆண்டு விரிவாக்க திட்டம் 627 ஏக்கரில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் நில ஆர்ஜித பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிப்பது உள்பட விமான நிலைய வளர்ச்சி உள்பட கொங்கு மண்டல வளர்ச்சிக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் கூறியதாவது, தமிழக தொழில் வளர்ச்சியில் கொங்கு மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. விமான நிலையம், ரயில் சேவை அதிகரிப்பது உள்ளிட்ட தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொள்ளாச்சி எம்பி-யின் செயல்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், கொங்கு குளோபல் போரம் துணைத் தலைவர் வனிதா மோகன் மற்றும் இயக்குநர் டி.நந்தகுமார் கூறியதாவது, கோவையில் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரித்தால் மிகவும் பயன் தரும். விமான நிலையம், ரயில்வே சேவை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொள்ளாச்சி எம்பி நாடாளுமன்றத்தில் பேசுவதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உதவி வருகிறார். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவர் காட்டும் அக்கறை மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்ட நில ஆர்ஜித பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. 87.5 ஏக்கர் நிலம் மட்டுமே மீதமுள்ளது. அதுவும் பத்திரம் தொலைந்து போனது. அதிக இழப்பீடு கேட்பது உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் நில ஆர்ஜித பணிகள் முழுவதும் நிறைவடையும். கோவை விமான நிலைய மேம்பாட்டின் அவசியம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதுடன் விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் நேரடியாக பேசினேன்.

தற்போது உள்ள ஓடுதள பாதையில் நேரோ பாடி வகையை சேர்ந்த விமானம் கோவை -துபாய் இடையே வாரத்தில் 4 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்கு விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...