சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தக்கூடாது - இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தல்

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து, M.Phil P.hD ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் சிறுபான்மையினருக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை நிறுத்தும் அறிவிப்புகளை ஒன்றிய அரசு ரத்து செய்யவும் வலியுறுத்தல்.


கோவை: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசு நிறுத்தக் கூடாது என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய அறிவிப்புகள் சிறுபான்மை சமூகத்தின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி உரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை (Pre- Matric Scholarship), இனி 9 மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசின் சிறுபான்மை துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

இனி 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது எனவும். இதற்கு அரசு கொடுக்கும் விளக்கம், ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்வி (கல்வி கட்டணம், புத்தகம், சீருடை உட்பட) கட்டாயமாக இருக்கும் சூழலில் இந்த உதவித்தொகை அவர்களுக்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டு தனது முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறது.

நாடு முழுவதும் செயல்படும் பல தனியார் பள்ளிக்கூடங்கள் 1-8 வகுப்புகளுக்கு கல்வி கட்டணமாக பல ஆயிரம் முதல் சில லட்சம் வரை வசூலிக்கின்றன. தனியார் துறையின் கொள்ளைக்கு துணை போகும் ஒன்றிய அரசு, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்கும் சிறுபான்மையினரின் கல்வி உதவித்தொகையை பறித்திருப்பது ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஏற்கனவே பள்ளி இடைநிற்றல் (School dropout) 20 சதவீதத்திற்கு மேல் இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இந்த முடிவு நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

இரண்டாவது அறிவிப்பு, M.Phil P.hD உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்காக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுகிறது என்பதாகும்.

இந்த திட்டம் குறிப்பாக ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி முஸ்லிம் சமூகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்தின் உயர் கல்வி வாய்ப்புகளையே தடாலடியாக பறிக்க முயற்சிக்கின்றது.

மேலும் இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த சிறுபான்மையின சமூகத்தையே பாதிக்கும் படுபாதக செயலாகும். ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இத்தகைய பாகுபாடான நடவடிக்கைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.



இதனை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே இந்த இரண்டு கல்வி உதவி தொகைகளையும் நிறுத்தாமல் அதனை தொடர்ந்து வழங்க வழிவகை செய்ய வேண்டும்

இவ்வாறு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...