கோவையில் நீர்நிலைகளில் ‘இ-கோலி’ பாக்டீரியா அதிகரிப்பு - கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை உக்கடம் மற்றும் வாலாங்குளம் உள்ளிட்ட புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் கழிவுநீர் கலப்பு காரணமாக மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் ‘இ-கோலி’ பாக்டீரியா அதிகரித்துள்ளதாக ‘சிறு துளி’ தனியார் தொண்டு அமைப்பு எச்சரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம், வாலாங்குளம் உள்ளிட்ட புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் அனைத்திலும் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் ‘இ-கோலி’ பாக்டீரியா அதிகரித்து உள்ளதாக சிறுதுளி அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ‘சிறு துளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உதவும் வகையில் சிறு துளி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

முதன்முதலில் 2003-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் அனுமதி வழங்கியதன் பேரில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டோம். இதன் காரணமாக தண்ணீர் தேக்கும் அளவு 2,47,612 கியூபிக் மீட்டர் அதிகரித்தது. 0.7 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பட்டுள்ளன.

நொய்யல் நீர்வழிப்பாதையில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட நீரோடைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் அதிகமான ஹெக்டேர் வேளாண் நிலப்பரப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

800-க்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது தவிர, கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் 400 மெட்ரிக் டன் கழிவுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 30 டேங்க் தூர்வாரப்பட்டுள்ளன.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு எங்கள் அமைப்பு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் கோவையில் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் தன்மை மிகவும் அபாயகரமாக மாறி வருகிறது. கோவை நகர் பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவற்றில் மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ‘இ-கோலி’ பாக்டீரியா மிக அதிகளவில் உள்ளன. கோவை நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா கூறியதாவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

உக்கடம் பெரியகுளத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாலாங்குளத்தில் அடுத்த கட்டமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு மட்டுமின்றி, நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கழிவுநீர் செல்வதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு வழியாக கழிவுநீர் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...