கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட அயல்நாட்டு பானத்திற்கு கோவையில் தொடரும் தடைகள் நிலைக்குமா ?


தமிழகத்தில் கடந்த மாதம் மாணவர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் உலகையே உலுக்கியது. ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு மீது வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டம் என்றாலும் இதில் பெரிதும் நடுங்கியது அமெரிக்க பண்ணாட்டு நிறுவனம் தான். காரணம், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் ஒரு பகுதியாக பண்ணாட்டு குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா உள்ளிட்டவற்றை இந்தியாவில் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களால் எழுப்பப்பட்டதே ஆகும்.

மாணவர்கள், இளைஞர்களின் இந்த கோரிக்கையானது அரசு தரப்பில் ஏற்கப்படும் முன்பே தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கல்லூரி நிர்வாகத்தினரும், திரையரங்கு, உணவு விடுதி உள்ளிட்டு வணிகநிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் இனிவரும் காலங்களில் பண்ணாட்டு குளிர்பானங்களை விற்பதை புறக்கனித்தனர். தொடர்ந்து, நம்நாட்டு குளிர்பானங்களான இளநீர், எலுமிச்சை சாறு, பதநீர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும், தமிழக வணிகர்கள் சங்கமும் இதற்கு ஆதரவு தெரிவித்து மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளனர்.

சில வணிகவளாக நிறுவனங்கள், இந்த முடிவுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்த முடிவானது ஒரு அவசர முடிவே ஆகும். ஒரு கொக்ககோலா குளிர்பானம் சிறிய பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இளநீர் 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை அதிகம் என்பதால் வரும் காலங்களில் இளநீரை விட கொக்ககோலா உள்ளிட்ட குளிர்பானத்தையே மக்கள் அதிகம் விரும்புவர் என தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, பண்ணாட்டு குளிர்பானங்களின் மீதான தடைகள் குறித்து மருத்துவர்கள், வனிகர்கள், பெரும் நிறுவனத்தினருடன் நமது சிம்ப்ளிசிட்டி நிரூபர் மேற்கொண்ட பேட்டியின் போது அவர்கள் கூறியதாவது:-




கார்த்திகேயன், டிஐஇ தலைவர்:







டிஐஇ தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், "பெப்சி, கொக்ககோலா மீதான தடை மாணவர்களின் போராட்டத்தின் விளைவாகவே நடந்தது. சுதாசி ஜாக்கிரான்மன்ச் போன்ற அமைப்புகள் கடந்த 20 வருடங்களாக பண்ணாட்டு குளிர்பானங்களை தடைசெய்யக்கோரி போராடி வருகிறது. ஆனால் அது தற்போதுதான் பொதுமக்களின் போராட்டம் மூலமாக நிரைவேறி உள்ளது.

இது தமிழக பொருளாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. இது, விநியோகஸ்தர்கள் மற்றும் வனிகர்களை தற்காலிகமாக பாதிக்கும். ஆனால் நாட்டின் நலனை கருத்தில்கொள்ளும் போது இந்த பாதிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. நாம் தற்பொழுது அமெரிக்காவில் நடைபெறும் விசயங்களைப் பார்த்தோமானால், அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப், உள்நாட்டு வேளைவாய்ப்பு உண்டாக்குவதை ஆதரிக்கிறார். அவர், அமெரிக்காவில் குடியேரியவர்களை வெளியேற்றி வருகிறார். அதனால், இந்திய பொருட்களையும், நமது பாரம்பரியமான பொருட்களையும் காப்பது உலகளவிலான சிந்தனையை ஒட்டியே அமைந்துள்ளது" என்றார்.




கந்தசாமி, விவசாயிகள் நல அமைப்பின் தலைவர்:







விவசாயிகள் நல அமைப்பின் தலைவர் கந்தசாமி கூறுகையில், "சமீபத்தில் கொண்டுவரப்பட்ட பெப்சி, கொக்ககோலா மீதான தடையை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். பெப்சி கோக் உள்ளிட்டவற்றை குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த தடையின் மூலம் மக்கள் மீண்டும் பாரம்பரியமான இளநீர், கம்பங்கூல், நன்னாரி போன்றவற்றிற்கு திரும்புவர். அதனால் உழவர்களும் பயனடைவர். உழவர்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் மேம்படையும்.

ஆனால், இந்த திடீர் தடையினால் பொருளாதாரத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். இதை முழுவதுமாக தடைசெய்வது சற்று சிரமமான காரியம். ஆனால், சிறிது சிறிதாக இந்த பானங்களை முழுவதுமாக தடைசெய்ய இயலும்.

இதேக் காலகட்டத்தில் வெளிநாட்டு சாக்கிலேட்டுகளை உண்பவர்களை ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் நம் பாரம்பரியமான தின்பண்டங்களை உண்பவர்களை ஏளனமாக பார்ப்பதும் மக்கள் மத்தியில் ஒரு மனநிலையாக நிலவிவருகிறது. மக்களின் மனநிலை மாறவேண்டும். மக்கள் மீண்டும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்" என்றார். 




காத்தமுத்து, சிறுநீரகமருத்துவர்:




ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் சிறுநீரகம் தொடர்பான மருத்துவர் காத்தமுத்து, "கொக்ககோலா உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் உடல் ஆரோக்கியத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை குறித்து கூறுகையில், அவை நமது பற்கள், எலும்புகள், சிறுநீரகம் மற்றும் நமது சீரனமன்டலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இளநீர் நமக்கு எப்போதுமே இயற்கை கொடுத்த வரம். என்னால் இந்த தடையினால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறயியலாது. ஆனால், இந்த தடை ஒரு நல்ல முடிவாகும்.

பல இளைஞர்கள் இந்த குளிர்பானங்கள் மீது மோகம்கொண்டு அதை அதிக அளவில் குடித்து வருகின்றனர். இதனால், நெஞ்சு எரிச்சல், உடல் எடைக் கூடுதல், சத்துக் குறைபாடு, எலும்புகளில் வலிமைக் குறைபாடு ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.




அருணேஷ், குச்சி அன்டு க்ரீம் - நிறுவனர்:

குச்சி அன்டு க்ரீம் உணவகத்தின் நிறுவனர் அருணேஷ் கூறுகையில், "நாங்கள் எங்கள் உணவகத்தை துவங்கியதில் இருந்தே பெப்சி, கோக் ஆகியவற்றை விற்பனை செய்வது இல்லை. நாங்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் பன்னீர் சோடா, பவான்டோ, நன்னாரி மற்றும் பாரம்பரிய பானங்களை கலந்து வழங்கி வருகிறோம். அதனால் அதில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. 

மாணவர்களின் இந்த போராட்டம் ஏற்படுத்திய விளைவுகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த பொருட்களை தடை செய்வது தற்போது அவசியத் தேவையாகும்" என்றார்.




டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத், விஜிஎம் கேஸ்ட்ரோ மைத்தின் தலைவர்:




விஜிஎம் கேஸ்ட்ரோ மைத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் கூறுகையில், "கொக்க கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்கள் நேரடியாக புற்றுநோயை உருவாக்குவது இல்லை. கொக்ககோலா மற்றும் பெப்சியில் பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள் காலப்போக்கில் அதை பயன்படுத்தும் மனிதர்களின் கல்லீரளை பாதிக்கிறது. அது பின்பு லிவர் சிரோசிஸ் என்ற நோயாக மாறுகிறது.

லிவர் சிரோசிசால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 சதவிகித நோயாளிகள் காலப்போக்கில் புற்றுநோய் நோயாளிகளாக மாறுகின்றனர். குழந்தைகளும், இளைஞர்களும் இந்த குளிர்பானங்களுக்கு அடிமைகளாக மாறிவருகின்றனர். 

இதை அதிகமாக பருகுவதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உடல் பருமன், ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, ஜீரன குறைபாடு மற்றும் பல்வேறு நோய்களினால் அவதிப்படுகின்றனர்.

சமீபத்திய பெப்சி மற்றும் கோக் போன்ற குளிர்பானங்கள் மீதான தடை மதுபானங்கள் மீது விதிக்கப்படும் தடைக்கு ஒப்பாக நான் பார்க்கிறேன். குளிர்பானங்கள் மதுபானங்களைப் போன்றே மிகக் கொடியது. 

எப்போதாவது இந்த குளிர்பானத்தை அருந்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி இந்த குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும். இது சில நேரங்களில் குணப்படுத்த முடியாததாகவும் ஆகிவிடும்" என்றார்.




ஜெய்ஸ்ரீ சந்தோஷ், விஎல்பி முதன்மை செயல் அதிகாரியும், செயலாளர்:




விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரியும், செயலாளருமான ஜெய்ஸ்ரீ சந்தோஷ் கூறுகையில், "மாணவர்கள் அவர்களாக முன்வந்து கொக்ககோலா, பெப்சி பானங்களுக்கு தடை கோரியுள்ளனர். மாணவர் குழு கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து கல்லூரி உணவு விடுதியில் இருந்து இந்த பானங்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் உடனடியாக அந்த கோரிக்கையை நிரைவேற்றினோம்" என்றார்.

மாணவர்களின் எழுச்சியினால் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்தியர்களின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. இதேப்போல், மற்ற எல்லா உணவுமுறைகளைப் பற்றியும் புரிந்துகொண்டு மக்கள் நம்முடைய பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை பின்பற்றுவார்களா அல்லது மாணவர்களின் போராட்டத்தின் முடிவாக ஏற்பட்ட எழுச்சி குறுகிய காலத்தில் நீர்த்துப்போகுமா என்பது வரும் காலங்களில் தான் தெரியும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...