கோவை அருகே பாலக்காட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

பாலக்காடு அடுத்த வடக்கஞ்சேரி பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.



கோவை: தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதியான பாலக்காடு அடுத்த வடக்கஞ்சேரியை அருகேயுள்ள சிற்றிலம்சேரி பகுதியில் சிலர் விளைச்சல் நிலங்கள் குத்தகைக்கு எடுத்து இஞ்சி விவசாயம் செய்து வருகின்றனர். இதில் மங்களம் டேம் பகுதியைச் சேர்ந்த சுதேவன் என்பவரும் ஈடுபட்டுள்ளார்.

இவர் தனது வாடகை கட்டடத்தில் இஞ்சி விவசாயத்திற்கு தேவையான பூச்சி மருந்துகள், விதைகள், விளைச்சலுக்கு தேவையான உபகரணங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கேரளாவிற்கு கடத்தி, சிற்றிலம் சேரியிலுள்ள வாடகை கட்டடத்தில் பதுக்கி வைத்திருந்துள்ளார்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆலத்தூர், கொல்லங்கோடு, பாலக்காடு காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து வடக்கஞ்சேரியை அடுத்த சிற்றிலம்சேரி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது மங்கலம்டேம் பகுதியைச் சேர்ந்த சுதேவன் குத்தகை நிலப்பகுதியிலுள்ள வாடகை கட்டடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு கோடி ரூபாய் விலைக்கு விற்பனை செய்யக்கூடிய 336 சாக்கு மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதில் தொடர்புடைய மங்கலம் டேமைச் சேர்ந்த சுதேவன் (41), இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான ரஞ்ஜித் (27) மனோஜ் (30) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழகம், கர்நாடகாவிலிருந்து பூண்டு மூட்டைகள் வாங்கிய லோடுகளுக்கு அடியில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்தி வந்து அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய குட்கா பொருட்கள் கேரளாவில் அதிகவிலைக்கு விற்பனை செய்தால் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டமுடியும் எனவும் கூறியுள்ளனர்.

ஆலத்தூர் கலால்துறை ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆலத்தூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...