உதகையில் மத்திய அரசுக்கு சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக வனத்துறையினர் ஐவர் கைது

நீலகிரி உதகை அருகே உள்ள மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் உதகை தெற்கு வன சரகர் உள்பட ஐந்து பேர் கைது செய்து போலீசார் விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தீட்டுகல் பகுதியில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் வனப்பகுதியை குத்தகைக்கு எடுத்து 1955 ஆம் ஆண்டு முதல் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்திற்குள் நூற்றுக்கணக்கான யூகோலிப்டஸ் மரங்கள் உள்பட ஆயிரக்கணக்கான அந்நிய நாட்டு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் உள்ள 370 மரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.



பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து அந்த ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி கண்ணன் என்பவர் சமீபத்தில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய உதகை புறநகர் டிஎஸ்பி விஜயலட்சுமி தலைமையிலான ஊட்டி E1 காவல்நிலைய போலீசார், மரம் வெட்டப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து மரத்தை திருடுதல், சதி திட்டத்திற்கு உடந்தையாக இருத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், உதகை தெற்கு வனச்சரகர் நவீன், வனவர் சசிதரன், வனக்காப்பாளர் பாபு, வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன் மற்றும் அந்த ஆராய்ச்சி மையத்தின் தற்காலிக தற்காலிக பணியாளர் நாகராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.



இதனை அடுத்து அவர்கள் அனைவரும் இன்று கைது செய்யப்பட்டு உதகை மேஜிஸ்டிரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.



இந்த மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் மட்டும் எவ்வாறு 370 மரங்களை வெட்டி எடுத்து சென்று இருக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த ஆராய்ச்சி மையத்தை சார்ந்த அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருக்கலாம் என்பது சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அந்த ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மரத்தை வெட்டி விட்டு அதனை மூடி மறைக்க வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரங்களை வெட்டியதற்காக வனத்துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...