கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் - சமூகநலத்துறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்து பள்ளியில் சேர்த்துவிடும் முயற்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார சூழலே இடைநிற்றலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.



கோவை: பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனையும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு பள்ளி தமிழக கல்விக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாட்டை சரிசெய்வதற்காக "இல்லம் தேடி கல்வி" எனும் முறையை நடைமுறைப்படுத்தியது.

இருப்பினும், குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி, படிக்க விருப்பமின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் மாணவ - மாணவிகள் படிப்பினை கைவிடுவது என்பது இன்றளவும் நடைபெற்று வருவதே நிதர்சனம்.

4000 மாணவர்கள் இடைநிற்றல் - சிறப்பு குழு கள ஆய்வு.

மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை மற்றும் அதை தடுப்பதற்காக சமூக நலத்துறை சார்பில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று இடைநிற்றல் மாணவர்கள் குறித்து பட்டியலை தயார் செய்தனர்.

கள ஆய்வின் முடிவில், கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஆனைமலை, எஸ்.எஸ்.சாமக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இடைநிற்றல்..!

பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட எது காரணமாக உள்ளது என்பதை அறிய சமூக நலத்துறை அதிகாரிகள் முற்பட்ட போது, இடைநிற்றல் செய்த மாணவ மாணவியர்கள் பெரும்பாலும்

குடும்ப பாரத்தை சுமக்கும் அழுத்தத்துக்கு ஆளாகி அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தை வாட்டும் வறுமையால், சிறு வயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல், ஒற்றை பெற்றோர் முறை, கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து பழக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாதது, படிப்பின் மீது நாட்டம் இல்லாதது போன்றவை இடைநிற்றலுக்கு அடுத்தடுத்த காரணங்களாக உள்ளன.

இந்தியாவில், கொரோனா காலகட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்த நிலையில், சமீபத்திய ஆய்வின்படி 2021-22-ம்ஆண்டில் தமிழகத்தில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தைகள் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இடைநிற்றல் மாணாக்கர்கள்.

இடைநிற்றலால் கல்வி பாதிப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், அதன் மறுபுறம் பேராபத்தானது. ஏனென்றால், தீய பழக்கங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில், இடைநிற்றல் மாணாக்கர்கள் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உள்ளது, என்கின்றனர் சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய அதிகாரிகள், "பின் விளைவுகள் குறித்து சிந்திக்க தெரியாத வயது, எது சரி, எது தவறு என்ற பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாத பருவம் என்பதால் தீங்கான செயல்களில் ஈடுபடுவோரிடம் பழக்கம் ஏற்பட்டு மாணவர்கள் பாழாகி போகும் நிலை ஏற்படுகிறது.

இடைநிற்றல் செய்யும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்களில் ஈடுபடுவது ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கப்படும் அதே நேரத்தில், மாணவிகள் வேறு மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆம், குழந்தை திருமணம்...! பள்ளிக்கு செல்லாத பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதை ஒரு பெரும் சுமையாக பார்க்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமண செய்து வைக்க திட்டமிடுகின்றனர். இல்லையேன்றால், சிறு கடைகள், வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆகவே, கற்றல் தடையால் ஆண், பெண் என்ற இரு பாலினத்தவரும் வெவ்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், அவ்வாறு இடைநிற்றல் செய்பவர்களில் மாணவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள்.

குறிப்பாக, இடைநிற்றல் மாணவர்களை பொறுத்தவரையில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகுதல், புகைபிடித்தல், மது அருந்துதல், வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோருடன் தொடர்பு ஆகியவை அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை", என்றனர்.

கற்றல் மையங்களை அரசு தொடங்க வேண்டும்.

இடைநிற்றல் குறித்து நம்மிடம். பேசிய பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்ட கொரோனா ஊரடங்கின் தாக்கம், ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை என்ன செய்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. 

மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்ட குடும்பங்கள், குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே சமயம், கொரோனாவிற்கு பிறகு, மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்காததும், இடைநிற்றலுக்கு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது. 

பொதுவாகவே, அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் இடைநிற்றல் அதிகமாக இருக்கும்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் படிப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. சிறுமிகளை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும், சிறுவர்களை பெட்ரோல் பங்க், ஹோட்டல்களில் வேலைக்கு அனுப்புவதும் நடந்து வருகிறது. 

இவற்றை தடுப்பதற்கு, இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் கற்றல் மையங்களை அரசு தொடங்க வேண்டும். தற்போது, பள்ளிகளில் நடந்து வரும் கலைவிழா, மாணவர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, பள்ளிகளில் கல்வியை போன்று விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர்நிலை கல்வி குறித்து முறையான வழிகாட்டுதலை அரசு அளிக்க வேண்டும். 

இதுபோன்ற, நடவடிக்கைகளை மேற்கொண்டால் இடைநிற்றலை படிப்படியாக குறைக்க முடியும், என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விழிப்புணர்வே தீர்வு - வீட்டுக்கே சென்று மாணவர்களை சந்திக்கும் சமூக நலத்துறையினர். 

உலகத்தில் உள்ள ஏனைய செல்வங்கள் அனைத்தும் நிலையில்லாதது. ஆனால், கல்வி மட்டுமே அழிவில்லாத செல்வமாய் அறிவொளியை உண்டாக்கும், என்பதை இடைநிற்றல் மாணவ மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் புரிய வைக்க, நேரடியாக மாணவர்களின் வீட்டுக்கே சென்று சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். 

பொருளாதார நெருக்கடி, குடும்பச் சூழல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளிட்ட காரணங்களால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான போதும், கல்வி ஒருவரது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதனை புரியும்படி எடுத்துரைத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்வியின் பக்கம் திரும்பப் பார்த்து பயணிக்க வைக்கும் முயற்சியில்,

மாவட்ட சமூகநல அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் வட்டார விரிவாக்க அலுவலர், ஊர்நல அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக, அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆலோசனை தந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆட்சியர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட் புத்தகம் வாங்க வழியின்றி படிப்பை நிறுத்திய மாணவியை மீண்டும் நோட்டில் எழுத வைத்த அதிகாரிகள்.

மதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளி படிப்பை முடிக்கும் முன் இடை நிற்றல் ஆனார். இது குறித்து தகவல் அறிந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் ம.பிருந்தா, ஊர்நல அலுவலர் பாக்கியலக்ஷ்மி ஆகியோர் இடைநிற்றல் செய்த மாணவியை சந்தித்துள்ளனர்.

மாணவியிடம் பேசிய போது, இவரது தந்தைக்கு கன் தெரியாது, தாயார் கூலி தொழிலாளி. யூனிஃபார்ம், நோட்டு புத்தகம் கூட வாங்க பணம் இல்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை என்று மாணவி கூறியுள்ளார். 

பிறகு, மாணவிக்கு தேவையான உதவிகள் பெற்று தருவதாக கூறிய அதிகாரிகள், வாழ்க்கையில் கல்வி இன்றியமையாதது என்பதை மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் எடுத்துக்கூறியுள்ளனர். 

பின்னர் இடை நிற்றல் சிறுமி பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததால், சிறுமி மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டார். 

இவ்வாறான சமூகநலத்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியால், இச்சிறுமியை போல பல்வேறு காரணங்களினால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவ - மாணவிகள் மீண்டும் பள்ளி மேஜைகளில் அமர்ந்து பள்ளிப்படிப்பை உற்சாகத்துடன் துவங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது; சமூக விடுதலையும், பொருளாதார விடுதலையும் கல்வி என்ற ஒற்றை ஆயுதத்தை மூலமே பெற முடியும் என்று சொன்ன சட்டமேதை அம்பேத்கரின் வார்த்தைகளை மாணவர்களின் மனதில் பதிய வைத்து, அவர்களை மீண்டும் வகுப்பறைகளுக்கு அழைத்து வரும் அனைத்து முயற்சிகளையும் சமூக நலத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...