விமான பயணிகள் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க காய்ச்சல் குறைப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் - அதிகாரிகள் வேண்டுகோள்

கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க விமான பயணிகள் காய்ச்சல் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், நோய் தடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்.


கோவை: கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும். ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது.

ஷார்ஜா விமானம் காலை 6.20 மணிக்கு கோவையில் தரையிறங்கி மீண்டும் 7 மணிக்கு புறப்பட்டு செல்லும். சிங்கப்பூரிலிருந்து வரும் விமானம் இரவு 7. 45 மணிக்கு கோவையில் தரையிறங்கி மீண்டும் 8.40 மணியளவில் சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். இந்த இரண்டு விமானங்களிலும் ஒவ்வொரு முறையும் 160 முதல் 170 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம்.

கொரோனா நோய் தொற்றை தடுக்க விமான நிலைய வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சல் குறைப்பு மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும் அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இது தவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சல் குறைப்பு மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்த போது இது போன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அவர்களின் நோக்கம் விமான நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பித்து சென்று வர வேண்டும் என்பதுதான்.

ஆனால் வீட்டுக்கு சென்ற பின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்து அதற்குப் பின்பு பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்று காய்ச்சல் குறைப்பு மருந்துகளை உட்கொண்டு பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்புக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவ குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து வகை காய்ச்சலும் கொரோனா நோய் தொற்று என்று அச்சம் கொள்ள தேவையில்லை. மக்கள் ஒத்துழைப்பு நோய் தடுப்புக்கு மிக முக்கிய முக்கியம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...