திமுகவின் 18 மாத கால ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகளாக செயல்படுவதாக விமர்சித்தார்.



கோவை: சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று அதிமுக இபிஎஸ் அணியினர் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விலை வாசி உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் சங்கர் தலைமை பொறுப்பு வகித்தார். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக அரசு விலை உயர்வை குறைக்க வேண்டும். கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுக வால் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த 18 மாதங்களில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு எதனையும் செய்யவில்லை. தற்போது உள்ள சூழலில் பல்வேறு ஊடகங்கள் திமுக அரசை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த ஊடகங்கள் கைவிட்டால் திமுகவினர் போய் விடுவார்கள்.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு குட்டிக்கரணம் போட சொன்னாலும் குட்டிக்கரணம் போடுவார்கள் போல. மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுக விற்கு அடிமைகளாக உள்ளனர். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...