ஈஷா சென்று திரும்பிய சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா..? - கோவையில் மனிதம் அமைப்பின் களஆய்வு அறிக்கை வெளியீடு

ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்குச் சென்ற சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு நடத்திய கள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: கோவையில் செயல்பட்டுவரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு கள ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் அறிக்கையானது கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



அறிக்கையை, மனிதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர ரமேஷ் வெளியிட , சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் இந்த கள ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.



அப்போது சிபிஐ அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

சுபஸ்ரீ மர்ம மரணம் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் களஆய்வு செய்து அரசு, காவல்துறை ஆகியோருக்கு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

ஈஷா யோகா மையத்தின் பல்வேறு அத்துமீறல்களுக்கு எதிராக சிபிஎம் தொடர்ந்து போராடி வருகிறது. ஈஷாவின் அத்துமீறல், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவினர் சென்றபோது, காவல்துறை உரிய முறையில் விளக்கம் தரவில்லை. கோவை காவல்துறையினரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை விசாரணை மட்டும் போதுமானதாக இருக்காது. பிரதமர், பா.ஜ.க தலைவர் என பலர் ஈஷா மையம் வந்து செல்லும் நிலையில், சிறப்பு குழு அமைத்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.



பின்னர் மனிதம் அமைப்பின் பொறுப்பாளர் ரமேஷ் கூறியதாவது:

சுபஸ்ரீ மர்ம மரணம் தொடர்பாக, 3 நாட்கள் எல்லா இடத்திற்கும் சென்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஈஷா மையத்திற்குள் போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது. மர்மமான விஷயங்கள் அங்கு நடக்கிறது.

இறந்த சுபஸ்ரீ குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுபஸ்ரீ தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். ஈஷா மைய பயிற்சி உடையுடன் சுபஸ்ரீ வெளிவந்ததை பார்க்கும்போது, அவர் உயிர் பயத்துடன் வந்ததுபோல இருக்கிறது.

சுபஸ்ரீ அம்மா, அண்ணன் ஆகியோரிடம் பிரேத பரிசோதனை நாளை என சொல்லிவிட்டு உடனே பிரேதப்பரிசோதனை செய்து அவர்களின் குடும்ப வழக்கத்திற்கு மாறாக உடலை எரித்துள்ளனர்.

கோவை காவல்துறையின் நடவடிக்கைகள் சர்ச்சையாக இருக்கின்றது. டி.எஸ்.பி இந்த விவகாரம் குறித்து எங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறிவிட்டார். சுபஸ்ரீ உடலை எரிக்க கட்டளை எங்கிருந்து வந்தது?"

சுபஸ்ரீ ஈஷாவில் எதையாவது பார்த்து பயந்து இருக்க வேண்டும். இந்த வழக்கை கோவை காவல்துறை விசாரிக்க கூடாது, தற்போதுள்ள டி.எஸ்.பி, எஸ்.ஐ விசாரிக்க கூடாது. அதுமட்டுமின்றி, சுபஸ்ரீ மர்ம மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும்.

சுபஸ்ரீ மர்ம மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் ராஜபாண்டி என்ற டி.எஸ்.பியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவர் இந்த வழக்கில் தலையிட கூடாது.

ஈஷா மையத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும். சுபஸ்ரீ குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சுபஸ்ரீ மர்ம மரணம் தொடர்பான இந்த களஆய்வு அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக நீதிமன்றம் செல்வதை பற்றி ஆலோசிப்போம், என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...