தமிழக சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - நடந்தது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் பாடி அவை நிகழ்வுகளை நிறைவடைவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. மரபுப்படி சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநர் ஆர்.என். ரவி வந்தபோது, திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள், தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கங்களை எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு இடையே ஆளுநர் ஆர்.என். ரவி, "என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்" எனக் கூறி உரையை ஆரம்பித்தார்.

ஆளுநரின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திமுக கூட்டணியில் உள்ள, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து நின்று கண்டன முழக்கங்களை எழுப்பிவிட்டு, வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து ஆளுநர் ஆற்றிய உரையில், “தமிழகத்தில் கொரோனா 2வது மற்றும் 3வது அலை பாதிப்பின்போது, மாநில அரசு அதனை சிறப்பாக கையாண்டது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பறிக்கிறது. அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டள்ள காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” எனப் பேசினார்.

ஆனால், அவரது உரையில், திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற வார்த்தைகளும், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகளும் இருந்தபோதும் அதனை படிக்காமல் தவிர்த்துவிட்டார். அதேநேரத்தில், ஆளுநரின் உரையை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.



ஆளுநர் உரை முடிந்த உடனே, வரலாற்றில் முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார்.



தொடர்ந்து முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, பேரவை நிகழ்வுகளை நிறைவு செய்யும் வகையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே, ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பாதுகாவலர்களுடன் அவையிலிருந்து திடீரென வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்ததோடு, அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து, அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை வெற்று உரையாக அமைந்திருந்தாகக் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி, பேரவையில், ஆளுநரை அமரவைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது அவை மரபுக்கு எதிரானது என்றும் அப்போது அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய, கோவை தெற்குத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து ஆளும்கட்சியினர் அவமதித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியதோடு, இதுதான் ஜனநாயக மரபா? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி சார்பில் விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் இதுவரை பின்பற்றப்பட்ட மரபு மற்றும் விதிகளுக்கு எதிராக ஆளுநர் உரையை வாசித்துள்ளதாகவும், ஆளுநர் உரைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார் எனவும் கூறினார்.

மேலும், தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் வெளியே சென்றதன் மூலம், தேசிய கீதத்தை அவர் அவமதிப்பு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே வாதம், விவாதம், சலசலப்புகள், வெளிநடப்புகள் என்பது மட்டுமே வழக்கமான நிகழ்வாக இருந்துவந்த நிலையில், இன்று தமிழக ஆளுநரே பேரவையிலிருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...