ஊட்டி நீர்வள ஆராய்ச்சி மையத்தில் மரங்கள் வெட்டிய விவகாரம் - 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு


நீலகிரி: ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 மூத்த விஞ்ஞானிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் 234 ஏக்கர் நிலத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1958-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தைக் குத்தகைக்கு எடுத்து இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அந்நிய நாட்டு மரங்கள் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 370 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர், உதகை புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ரூ.49 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மழை காலத்தில் கீழே விழுந்த மரங்களுடன் சேர்த்து, நல்ல நிலையிலிருந்த மரங்களை அபாயகரமான மரங்கள் எனக் கூறி முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதும், இதில் உதகை தெற்கு வனச்சரக வனத்துறை அதிகாரிகள், மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உதகை தெற்கு வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன், ஆராய்ச்சி மைய தற்காலிக பராமரிப்பாளர் நாகராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மையத்தின் தலைமை அலுவலகத்தில் தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ஊட்டி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்திற்கும், விஞ்ஞானி மணிவண்ணன் அஸ்ஸாமிற்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒடிசாவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...