‘சுபஸ்ரீ மரண வழக்கில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்..!’ - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்று உயிரிழந்த சுபஸ்ரீயின் மரண வழக்கில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.


கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பழனிகுமார் (40) - சுபஸ்ரீ (34) தம்பதி. இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.



இவர்கள் இருவரும் அவ்வப்போது, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்று வந்ததாக தெரிகிறது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சுபஸ்ரீ “சைலன்ஸ்” என்ற ஒரு வார யோகா பயிற்சிக்காக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

ஒரு வார பயிற்சி முடிந்த நிலையில் மனைவியை அழைத்துச் செல்வதற்காக கணவர் பழனிக்குமார், டிசம்பர் 18ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவி சுபஸ்ரீ வராததால், யோகா மையத்தில் கேட்ட போது, அவர் ஏற்கனவே புறப்பட்டு சென்றதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, அன்றைய தினம் காலையில் ஈஷா யோகா மையத்தை விட்டு வெளியே வந்த சுபஸ்ரீ, டாக்சி ஒன்றில் லிப்ட் கேட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கணவர் பழனிக்குமார் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.



இந்நிலையில், கிட்டத்தட்ட 14 நாட்கள் கழித்து துலுக்கன்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில், சுபஸ்ரீயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பெண் மாயமான நிலையில், கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என தளி சட்டமன்ற உறுப்பினர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை விடுத்தார்.



இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்துறை காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பழனிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகிலுள்ள கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர், சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைபேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுபஸ்ரீ மரணம் குறித்த வழக்கு விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...