பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கழுத்தறுத்து கைதி தற்கொலை முயற்சி

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து, போலீசார் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீசார் முன்னிலையில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (29), இவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த கருப்பசாமி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் கருப்பசாமி பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து காமநாயக்கன்பாளைய போலீசார் அங்குச் சென்று கருப்பசாமியைக் கைது செய்து பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமியைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பாதுகாப்புடன் கருப்பசாமியை அழைத்துச்சென்ற போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாகத் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கருப்பசாமியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



அதேபோன்று கருப்பசாமி மனைவி மஞ்சுளாவும், பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் போலீசாரின் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த கைதியிடம் ஆயுதம் எவ்வாறு வந்தது? போலீசார் கைதியை ஆஜர்படுத்தும் போது ஏன் சோதனை மேற்கொள்ளவில்லை?எதனால் கைதி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...