கஞ்சா வியாபாரிகளுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

கோவையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக உதவி காவல் ஆய்வாளரைத் தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பு.


கோவை: கோவை சங்கனூர் சந்திப்பு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரைத் தனிப்படை படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

கோவை சங்கனூர் சந்திப்பு அருகே ரூட்ஸ் மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகத் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வந்த இரு சக்கர வாகனத்தைச் சோதனை செய்த போது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், காரமடையைச் சேர்ந்த சந்திரபாபு என்பதும், வெள்ளலூரில் அறை ஒன்றை எடுத்துத் தங்கி, ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாகக் கோயம்புத்தூருக்குக் கஞ்சா கடத்தி வந்து சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிடக் கூலித் தொழிலாளர்களுக்குச் சிறு சிறு பொட்டலங்களாகவும் சந்திரபாபு கஞ்சாவை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து போலீசார் 8 கிலோ 200 கிராம் கஞ்சா,இரு சக்கர வாகனம், ரூ.42,400 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் சந்திரபாபுவின் கூட்டாளிகள் குறித்து பட்டியல் எடுத்துக் கொண்ட போலீசார் அவர்களையும் தேடினர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் மகேந்திரன், மாணிக்கம், மகேஷ் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் மகேந்திரன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியிருக்கின்றார். ஈரோடு சைபர் கிரைமில் தற்போது பணியாற்றி வருகின்றார். சந்திரபாபுவை விசாரித்தபோது மகேந்திரன் கஞ்சா வியாபாரிகளுக்குக் கஞ்சாவைப் புழக்கத்தில் விட உதவியது தெரியவந்தது.

மேலும் அவர் கஞ்சா வியாபாரிகளிடம் அலைபேசியில் பேசியது, கஞ்சா விற்பனை, சப்ளை செய்வதை அறிந்துகொள்ளாதது போல மகேந்திரன் நடந்திருக்கின்றார். அதனடிப்படையில் ஈரோடு சென்ற தனிப்படை போலீசாரால் மகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜலீல், ஜலில், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி உள்ளிட்டவர்களைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தைத் தடுக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியே கஞ்சா விற்க உடந்தையாக இருந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...