ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் கோரிக்கை

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கக் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை.


கோவை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கோரிக்கை வைத்துள்ளார்.



கோவையில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் ஊராட்சி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,தமிழகத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதைக் குறித்தும், கிராமசபைக் கூட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஊராட்சித் தலைவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 234 பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று அங்குள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர். தமிழக அரசியல் தற்போது வெறுப்பு அரசியலாகவும், பண அரசியலாகவும் மாறிவிட்டது.

தேர்தல் நேரத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடும் நோக்கிலேயே அனைத்து அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல, தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமான வெறுப்பு அரசியல் யாருக்கும் பயனளிப்பதில்லை. தமிழக அரசு என்ற சொற்றொடர் அண்ணா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே உள்ளது. அது தவறான சொல்லல்ல.

மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆளுநரும், தமிழக அரசும் இணக்கமாகச் செயல்பட்டால்தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநர் அறிக்கை படித்தபோது அரசு எழுதித் தந்த அறிக்கையை அப்படியே படிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்த ஸ்டாலின் தற்போது முதல்வரான பின்னர் ஆளுநர் அறிக்கையைத் திருத்தம் செய்து படிப்பதாகப் புகார் கூறுவது திமுகவின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.

திமுக மேடைகளில் மற்றவர்களைத் தரம் தாழ்ந்து பேசுவது கண்டிக்கத்தக்கது. அத்தகையோரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும். தமிழக அரசுக் கல்வி உள்ளிட்ட துறைகளில் சர்ச்சைக்குரிய மசோதாக்களை அனுப்பியுள்ளதாலேயே அவற்றில் கையெழுத்திடவில்லை என ஆளுநர் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்காதது கண்டனத்திற்குரியது. இந்த மசோதாவுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு இந்திரா காந்தி மாற்றியபோது அப்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால்தான் தற்போது நீட் தேர்வு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாநில முதல்வர்களையும் ஒன்றிணைத்து கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தான் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், 5 ஆண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றைச் செயல்படுத்தவில்லை. இத்தகைய சூழலில் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அத்தொகுதி மக்கள் திமுக அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

ஊழலற்ற ஆட்சியைத் திராவிட கட்சிகளால் தரவே முடியாது. தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்தால் மட்டுமே 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாற்றத்தை எதிர்நோக்க முடியுமெனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...