திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதாகப் பரவிய செய்தி தவறானது..! - காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பேட்டி

திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கியதாகப் பரவி வரும் வீடியோ தவறான செய்தி என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தகவல்.



திருப்பூர்: தமிழர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களைத் துரத்தித் துரத்தி தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக நேரடியாகக் களத்தில் விசாரிக்கையில், கடந்த 14ஆம் தேதி அன்று பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இருவர் டீ குடிக்க வெளியே சென்ற போது அங்கு மதுபோதையிலிருந்த தமிழக இளைஞர்களுடன் சிகரெட் புகை ஊதியது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தமிழக இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அதன் பின்னர் டீ இடைவெளிக்கு வெளியே வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களைத் தாக்கத் துரத்தியதும் தெரியவந்தது.

அந்த சமயத்தில் 15-வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காவலர்களைக் கண்டதும், தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி உள்ளனர். போலீசார் அந்த பகுதியில் விசாரித்த போதும் புகார் கொடுக்க யாரும் இல்லாததால் வழக்கு பதிவு செய்ய முடியாமல் இந்த சம்பவத்தைக் கைவிட்டனர்.

சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவம் 12நாட்களுக்குப் பிறகு, வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்துப் பேசிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாகத் தவறான செய்தி பரவி வருகிறது.

இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாகச் சித்தரித்துப் பரப்பி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு தனிப்படை சமூக வலைத்தளங்களில் தவறாகத் தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். யாரும் இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...