பல்லடம் அருகே சொத்துக்காக அண்ணனை கடத்தி மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூர தங்கை - இருவர் கைது!

பல்லடம் அருகே சொத்துக்காக அண்ணனை தங்கையே கடத்தி கட்டிவைத்து அடித்து சொத்து, பணம், நகைகளை பறித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து, மனநல காப்பகத்தில் சேர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி, மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொன்னுசாமி இறந்து விட்ட நிலையில் அவரது சொத்துக்கள் மகன் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. சிவக்குமாருக்கு பெருமாநல்லூரிலும், கோவை சுல்தான்பேட்டையிலும் மூன்றரை ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது.

சிவக்குமாருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர்களின் சொத்துக்களை அம்பிகா குடும்பத்தினர் தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி அடிக்கடி சிவக்குமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி சேடபாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வடிவேல் வீட்டுக்கு சிவக்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு தனது கணவர் மற்றும் மகனுடன் சென்ற தங்கை அம்பிகா உள்ளிட்டோர், சிவக்குமாரை வாயை மூடி கயிற்றால் கட்டி காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரை அறிவொளி நகரில் உள்ள அம்பிகாவுக்கு சொந்தமான வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்ததாக கூறப்படுகிறது.

அடி தாங்க முடியாமல் சிவக்குமார், என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து சிவக்குமாரை கீழே இறக்கிய அம்பிகா, வேலுசாமி, கோகுல் ஆகியோர் 21 ஸ்டாம்ப் பேப்பரில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, சிவக்குமார் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரம், செயின், ஒன்றரை லட்சம் பணம் மற்றும் தெக்கலூரில் உள்ள வீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பறித்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு கார்களில் சிவக்குமாரை ஏற்றி கொண்டு பெங்களூர் சென்ற அவர்கள், செல்லும் வழியில் சிவக்குமாரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து பார்த்த போது சிவக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்துள்ளார்.

இதன் பின்னர், அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் சோமனூர் சங்கீதா தியேட்டரின் உரிமையாளரான அவரது மாமா ராமமூர்த்தி ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து, அங்கு சென்ற அவர்கள் சிவக்குமாரை மீட்டு பல்லடம் அழைத்து வந்துள்ளனர்.



இந்நிலையில், தன்னை கடத்தி தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற தங்கை அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், கோகுல் மற்றும் வேலுச்சாமியை கைது செய்தனர். இதனையடுத்து கோகுலை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்த போலீசார், உடல்நல குறைவு காரணமாக வேலுச்சாமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிவக்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள அம்பிகா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

சொத்துக்காக தங்கையே அண்ணனை கடத்தி மனநல காப்பகத்தில் சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...