ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு - கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராகப் போட்டியிடுவார் என அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பதில் பல்வேறு சிக்கல்கள், குழறுபடிகள் நிழவிவந்தன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்த நிலையில், வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் செய்துவந்தது.

ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என கூறப்பட்டதோடு, இந்தக் கூட்டணியில் பாஜகவின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர் அறிவிப்பில் பெரும் இழுபறி நீடித்துவந்தது.



இந்நிலையில், அதிமுக சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏவான கே.எஸ்.தென்னரசு போட்டியிடவுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கட்சியில் ஆரம்ப காலத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வரும் கே.எஸ். தென்னரசுக்கு வயது 65. 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராகவும், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளர்,

1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

2001 & 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அ.தி.மு.க. கட்சிக்காக போராட்டங்கள் நடத்தி 8 முறை இவர் சிறை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வரும் கே.எஸ்.தென்னரசு, கடந்த 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

பெரியார் மாவட்ட தொழில் வர்த்தகசபை துணைத்தலைவராக 22 ஆண்டுகள், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டிங் அசோசியேசன் தலைவராக 20 ஆண்டுகள், செயலாளராக 3 ஆண்டுகள், தமிழ்நாடு பிரிண்டிங் -பிராசசிங் சம்மேளன மாநில தலைவராக 16 ஆண்டுகள் என பல பதவிகளை இவர் வகித்து உள்ளார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் மாவட்ட துணைத்தலைவராகவும், ஈரோடு மாவட்ட பாரத் பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு, மனைவி டி.பத்மினி, மகன் டி.கலையரசன், மருமகள் வி.சுகாசினி, மகள் டி.கலைவாணி, மருமகன் எஸ்.பரணிதரன் ஆகியோருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...