உடுமலையில் நெல் சாகுபடியில் பூஞ்சாண நோய் பாதிப்பை தடுக்கும் வழிகள் - வேளாண்மைத்துறை அறிவுரை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை வேளாண்மைத்துறை வழங்கியுள்ளது.


திருப்பூர்: நெல் சாகுபடியில் பூஞ்சாண நோய் பாதிப்பைத் தடுப்பது குறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் சுமார் 7,500 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர் வளர்ச்சிப் பருவம், பூ பருவம், பால் பிடிக்கும் பருவம் மற்றும் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது.



மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்சமயம் நிலவி வரும் காற்றின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மூடுபனி காரணமாக நெற்பயிரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களான இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய் தாக்குவதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது.

நெற்பயிரில் இலைகளில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளி கோள வடிவில் தோன்றி இலை முழுவதும் பரவி காணப்படுவது இலை புள்ளி நோய் தாக்குதலின் அறிகுறியாகும். இதனைத் தவிர்க்க நெல்லில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ 44, பவானி ரகங்களை சாகுபடி செய்தல் சிறந்தது. மேலும், அதிகப்படியான தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.



விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல் மற்றும் நெல் நடவு வயலில் தொழு உரத்துடன் 2 கிலோ கலந்து இடுதல் வேண்டும். மேலும், ரசாயன பூஞ்சாணக் கொல்லிகளான மேன்கோசெப் ப்ரொபினெப், கார்பென்டசிம் போன்றவற்றைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

குலை நோய் நெல் இலைகளின் மேற்புறத்தில் குழல் வடிவிலான இலைப்புள்ளி தோன்றி கண் போன்று காட்சியளிக்கும். இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும். கணுப்பகுதியில் கருப்பு நிறத்தில் அழுகியது போன்று தோற்றமளிக்கும். குலைநோய் பாதித்த பயிர்களின் கதிர்கள் வெளிவருவது தடைப்படும். அதையும் தாண்டி வெளிவரும் கதிர்கள் பதர்களாக இருக்கும்.



குலை நோயிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களான கோ 57,கோ 51,கோ 52,கோ 53,ஏடிடி 36,ஏடிடி 39,ஏஎஸ்டி 18 மற்றும் ஐஆர் 64 ரகங்களை சாகுபடி செய்யலாம். நெல்லில் அதிக தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும்.

அத்துடன் நெல் வயலில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக பராமரித்தல் மூலமாக குலை நோயைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண நோய்களின் அறிகுறி தென்பட்டால் அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...