இருளர் இன ஆதிவாசி மக்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை

உதகை அருகே இருளர் இன ஆதிவாசி மக்களின் உரிமைகளைத் தடுப்பதாகக் கூறி 7 ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் திடீர் ஆலோசனை.


நீலகிரி: ஆனைக்கட்டி, சொக்கநள்ளி, சிறியூர், வாழைத்தோட்டம், மாயார், பொக்காபுரம் உள்ளிட்ட 7 கிரமங்களை சேர்ந்த ஆதிவாசி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், தோடர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் இருளர் இன பழங்குடியின மக்கள் உதகை அருகே உள்ள ஆனைக்கட்டி, சொக்கநள்ளி, சிறியூர், வாழைத்தோட்டம், மாயார், செம்மநத்தம், பொக்காபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது கிராமங்கள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நிலையில் சமீபகாலமாக தங்களது வாழ் உரிமைகளைத் தடுக்கும் விதமாக வனத்துறை செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள ஆனைக்கட்டி கிராமத்தில் வனத்துறையைக் கண்டித்து ஒன்று கூடிய 7 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 7 ஊர்த் தலைவர் சங்கர் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



அப்போது 7 கிராம மக்களும் தங்களது பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இருளர் இன ஆதிவாசி இளைஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து வரும் வனத்துறையினரைக் கண்டிப்பதாகவும், 2006 வன உரிமைச் சட்டத்தின் படி தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியும், உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களது மூதாதையர்கள் கல்லறைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று வரத் தடை விதிக்கக் கூடாது, மனிதர்களைத் தாக்கும் யானை, கரடி, சிறுத்தைகளைக் கிராமப் பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் விடக் கூடாது, ஆதிவாசி கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும் தங்களது பிரச்சனைகள் குறித்து விரைவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் முறையிட முடிவு செய்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆனைக்கட்டி ஊர் துணைத் தலைவர் பசுவன், முன்னாள் தலைவர்கள் பொம்மராயன், பி.பசுவன், வன உரிமைக் குழு தலைவர் மணி, ஆதிவாசி கோவில் தலைவர்கள் மாரி மற்றும் சிவக்குமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...