துடியலூரில் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட் 2023 கருத்தரங்கு.!

கோவை துடியலூரில் உள்ள பட்டய கணக்காளர் கல்லூரியில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பட்ஜெட் 2023 குறித்த பட்டய கணக்காளர்கள் விவாதித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட் 2023 குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.



கோவை துடியலூரில் உள்ள பட்டய கணக்காளர்கள் கல்லூரி வளாகத்தில், இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட்-2023 குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க தலைவர் சின்ன மஸ்தான் தலைகாயலா தொடங்கி வைத்தார்.



இந்த கருத்தரங்கில் நேரடி வரிகள் குறித்து மும்பையை சேர்ந்த பட்டய கணக்காளர் பிரதீப் காப்பாசி மற்றும் ஜி.எஸ்.டி மற்றும் மறைமுக வரிகள் குறித்து சென்னையை சேர்ந்த பட்டய கணக்காளர் கணேஷ் பிரபு ஆகியோர் பேசினர்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஜலபதி, தென் மண்டல உறுப்பினர் எஸ்.ராஜேஷ், நிர்வாகிகள் ஏ.வி.அருண், எஸ்.பண்ணராஜ், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சின்ன மஸ்தான் தலைகாயலா பேசியதாவது, அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் பட்ஜெட் கருத்தரங்கு தேவை என்பதால், நாங்கள் அதனை நடத்தி வருகிறோம்.

இந்த புதிய பட்ஜெட்டில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வரிகள் குறித்தான சாதக பாதகங்கள் எடுத்துரைக்க வேண்டியதுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தினர் பட்ஜெட் குறித்து தெரிவித்து வருகிறோம்.

முக்கியமாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பட்ஜெட் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுடன் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் இணைந்து நிதித்துறை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

கோவை மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலுள்ள 45 கிளைகளிலும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் குறித்தான இந்த கருத்தரங்குகள் அனைத்து தொழில் முனைவோர்கள் மற்றும் சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஜலபதி பேசியதாவது, ரூ.7 லட்சம் வரை வருமான வரி தளர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. பட்ஜெட் குறித்தான கருத்துகளை இந்திய பட்டய கணக்காளர் சங்க பட்டய கணக்காளர்கள் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கை கோவை கிளையை சேர்ந்த தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கருத்தரங்கில் பட்டய கணக்காளர்கள், தொழிலதிபர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...