பல்லடம் அருகே பள்ளி மாணவிகளை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் - அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே பேருந்தில் இருந்து 15 பள்ளி மாணவிகளை நடத்துநர் நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளை நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்டதை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சிக்குட்பட்ட புள்ளியப்பம்பாளையம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ - மாணவிகள் பல்லடம் அருகேயுள்ள பள்ளிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வாவிபாளையத்தில் இருந்து சித்தம்பலம் மற்றும் பல்லடம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயணித்துள்ளனர்.

இவ்வழியாக பள்ளிக்கு செல்ல காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி கூடுதலாக இல்லாததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பேருந்தில் பயணித்த 15 பள்ளி மாணவிகளை பேருந்து நடத்துநர் கேத்தனூரிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.



இந்நிலையில், 15 பள்ளி மாணவிகளும் கேத்தனூரில் இருந்து புள்ளியப்பம் பாளையத்திற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர். இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் பள்ளி மாணவிகள் முறையிட்டுள்ளனர்.



இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் இன்று காலை அரசு நகரப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி மாணவிகளை எப்படி பாதியிலேயே இறக்கிவிட்டு செல்லலாம் என பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏதுவாக பயணிக்க கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...