கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் - கூண்டோடு தூக்கிய தனிப்படை போலீசார்!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த கும்பலை, தனிப்படை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். விசாரணையில், கர்நாடாகவில் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை கொள்முதல் ஐந்து மடங்கு லாபத்துக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் புழக்கத்தினை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், போதை பொருள் விற்பனையை தடுக்க, போதை பொருள் விற்பனை கும்பலை பிடிக்க, போதை பொருள் பிரியர்களை அதிலிருந்து மீட்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோயமுத்தூரில் மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக, போதை பொருள் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணனின்உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரவி தலைமையில் இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படை போலீசார் நடத்திய கண்காணிப்பில் சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், நான்கு பேரும் போதைக்காக வலிநிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்று வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், ஊசி சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த மாத்திரை எங்கிருந்து வந்தது ? பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மாத்திரை எப்படி வாங்கப்பட்டன ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், கோயமுத்தூரில் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மருந்தகங்களில் மருந்து தரக்கூடாதென விடுத்த எச்சரிக்கையையடுத்து, மாத்திரைகளை வாங்க போதை பிரியர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்துக்கு சென்று போதைக்காக வலி நிவாராணி, தூக்கம், மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வாங்கி வரும் இந்த கும்பல், அதை கோவையில் உள்ள போதைப் பிரியர்களிடம் 5 மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள், ஐ டி ஊழியர்கள் என பலர் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்திவருவதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் பொருட்டு தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைதாகியிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...