தாராபுரத்தில் வெறி நாய் கடித்து 10 ஆடுகள் பலி - கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!

தாராபுரம் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியான நிலையில், வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வெறி நாய் கடித்து குதறியதில், 10 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தை அடுத்துள்ள மனக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட தேர்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் மனக்கடவு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்திற்காக கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வார சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்து விட்டு சென்று விடுகிறது.



கடந்த 10 நாட்களாக மனக்கடவு கிராமத்தில் வெறி நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200 க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து ஆடுகளை கொன்றுள்ளது.

இந்நிலையில், இன்று நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு, ஆகியோருக்கு சொந்தமான 10 செம்மறியாடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது.



இதனால் அதிர்ச்சி அடைந்த மனக்கடவு கிராம ஆடு மேய்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டியதுடன், உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து தங்களது கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.



அதன் பிறகு கோட்டாட்சியர் குமரேசனிடம் மனக்கடவு கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், மனக்கடவு பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் தங்களது ஆடு மற்றும் கோழிகளை கடித்து குதறி கொன்று விடுகிறது. மேலும் சில நேரங்களில் கோழிகளை மர்ம நபர்கள் திருடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

இந்நிலையில், உடனடியாக நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.கோழிகளை திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் வெறி நாய்களை பிடிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, நாய்களைப் பிடித்து காப்பகங்களில் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நாய்கள் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கோழிகளை திருடும் நபர்களை கண்டறிய அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் முற்றுகை போராட்டம் காரணமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...