கோவை நீதிமன்றம் அருகே பட்டபகலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கோத்தகிரியில் 7 பேரை கைது செய்த போலீசார்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் இருவரை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், கொலை தொடர்பாக 7 பேரை கோத்தகிரி அருகே போலீசார் கைது கோவைக்கு அழைத்துச் சென்றனர்.



கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை நீதிமன்றத்திற்கு நேற்றைய தினம் (13.02.2023) பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக வந்துள்ளனர்.



நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் இருவரும் தேனீர் அருந்திய போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.



இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே கோத்தகிரியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் வழிமறித்த போது நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் கோவை நீதிமன்றத்தில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.



இதனையடுத்து, 3 வாகனத்தில் வந்த ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார், கட்டபெட்டா பகுதியில் நடத்திய வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார், கோவைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கோவை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...