வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி - கோவையில் ரூ.1.5 கோடி சுருட்டிய நபர் கைது..!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 1.5 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த தம்பதி அருண் - ஹேமலதா மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து மோசடி தொடர்பான ஆவணங்கள், 2 கார்கள், 45 பவுன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை புலியகுளம் பஜார் வீதியை சேர்ந்த ரூபன்ராஜ்குமார் என்பவர்மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் கடந்த 2021-ம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பார்த்தேன்.

இதனை தொடர்ந்து, அதில் கூறப்பட்டிருந்த வடகோவை-மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பில் பெரியசாமி சாலையில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். அங்கு இருந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அருண், அவரது மனைவி ஹேமலதா ஆகியோரை சந்தித்து பேசினேன்.

அப்போது அவர்கள் ஐரோப்பாவில் உள்ள லாத்வியா நாட்டிற்கு செல்ல பிசினஸ் விசா பெற்று தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும், ரூ.3 லட்சத்தை முன்பணமாக தரும்படி கூறினர். இதையடுத்து, கடந்த 21.9.21 அன்று ரூ.3 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் 4 மாதத்தில் விசா தருவதாக உறுதி அளித்தனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி விசா பெற்றுத்தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று அருண், ஹேமலதா ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டேன். அப்போது அவர்கள் லாத்வியா நாட்டிற்குசெல்ல விசா கிடைக்க காலதாமதம் ஏற்படும். எனவே, செக் குடியரசிற்கு செல்ல ஒர்க் விசா தயாராக உள்ளது. அதற்கு ரூ.4½ லட்சம் செலவாகும். ஏற்கனவே ரூ.3 லட்சம் செலுத்தி உள்ளதால் மீதி ரூ.1½ லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் என்றனர்.

இதனை தொடர்ந்து நான் அவர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் கூறியபடி எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் நான் கொடுத்த ரூ.4 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அந்தப் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி மற்றும் போலீசார் அருண் மற்றும் ஹேமலதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தம்பதியினர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி ஏமாற்றியிருப்பது உறுதியானது. அருண் ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, மாநகர் குற்றப்பிரிவு போலீசார் அருணை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பேரில், சிவானந்தா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் உள்ள அருணின் அலுவலகம், டாடாபாத்தில் உள்ள அருணின் வீடு ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, வழக்கில் தொடர்புடைய 329 ஆவணங்கள், 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிவானந்தா காலனியில் ஒரு வங்கியில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டேதோடு, அவரது வங்கி கணக்குகளை குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...