கோவையில் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை-அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,621.30 கோடியில், 10 கி.மீ-க்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை இன்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேம்பாலப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.


கோவை: உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார்.



கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,621.30 கோடியில், 10 கி.மீ-க்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணி தொடர்பாக, ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, ஏறு தளம், இறங்கு தளங்கள் கட்டும் இடங்களான வ.உ.சி மைதானம், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ் மற்றும் சிட்ரா பகுதியில் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அப்பிரிவினரைத் தொடர்பு கொண்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, நிலம் கையகப்படுத்தும் பணியைத் துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், அவினாசி ரோடு மேம்பாலப் பணிகள், 42 சதவீதம் முடிந்துள்ளது. 80 தூண்களுக்கு இடையே மேல்நிலை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 481 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லூரி, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லூரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். பாலத்தின் இருபுறமும் தலா, 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டப்படும், என்றனர்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறுகையில், ஓடுதளத்தை தூக்கி வைக்க, மூன்று இயந்திரங்களே இருப்பதால், வாரத்துக்கு மூன்று இடங்களில் மட்டுமே பணியாற்ற முடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக இயந்திரங்கள் தருவித்து, பணிகளை வேகப்படுத்தவும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கும் பணியை உடனடியாக துவக்கவும் அறிவுறுத்தினேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...