கோவையில் வங்கிக்கடன் என்ற பெயரில் நூதன மோசடி - குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!

கோவையில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தனியாக ஒரு நிறுவனத்தையே ஆரம்பித்து, வாடிக்கையாளர்களிடம் ஆவணங்களைப் பெற்று, லோன் செயலி மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்று நூதன மோசடியில் ஈடுபட்ட தினேஷ் என்பவரை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசிப்பவர் யுவராஜ பாண்டியன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், கடன் பெற முயற்சித்திருக்கிறார்.



இந்த நிலையில், இவருக்கு டி.எஸ்.பேங்கிங் சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்திருக்கின்றது.

அப்போது, தாங்கள் லோன் பெற்று தருவதாக தெரிவித்து, அதற்கான ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதன்படி, ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்களை யுவராஜ பாண்டியன் கொடுத்துள்ளார். ஆனால் லோன் கிடைக்கப்பெறவில்லை.

இதுகுறித்து, அந்த கம்பெனி பெண் ஊழியர்களிடம் பேசும்பொழுது, லோன் தருவார்கள் காத்திருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனை நம்பி சில காலம் காத்திருந்த யுவராஜ பாண்டியன், காலம் தாமதம் ஆனதால் லோன் தர மாட்டார்கள் என நினைத்து கம்பெனி ஒன்றில் கடன் கேட்டு அழைத்ததையும் ஆவணங்கள் கொடுத்ததையும் மறந்துவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு வங்கி ஒன்றில் இருந்து பேங்க் ஏ.டி.எம் கார்டு வந்துள்ளது. தனக்கே தெரியாமல் வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதனையும், அதற்கு பேங்க் ஏ.டி.எம் கார்டு வீட்டிற்கு வந்து இருப்பதையும் பார்த்து யுவராஜ பாண்டியன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அதில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டு இருப்பதையும், கிரெடிட் கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

தன் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, முன்பு ஆவணங்களை பெற்ற நிறுவனம் நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை உணர்ந்த யுவராஜ் பாண்டியன், டி.எஸ். சொல்யூசன் கம்பெனி ஊழியர்களிடம் அழைத்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தந்ததால், தான் ஏமாற்றப்பட்டதனை தெரிந்துகொண்ட யுவராஜ பாண்டியன் சிட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

வழக்கமாக ஓ.டி.பி கேட்டு பணம் திருடும் கும்பல், மொபைல் போனை ஹேக் செய்து டேட்டாவை திருடி பணம் திருடும் கும்பல் பற்றி அறிந்திருந்த சைபர் கிரைம் இந்த வழக்கை புதுமையாக பார்த்திருக்கின்றது. உடனடியாக, போலீஸ் கமிஷனரான பாலகிருஷ்ணண் உத்தரவின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் முத்து, சிவராஜ் பாண்டியன் மற்றும் காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை போலீஸார் குற்றவாளியை பிடிக்க முனைப்பு காட்டினர்.

419, 420 IPC & 66C 66D of IT Act பிரிவின் கீழ் வழக்கு பந்திந்து நடவடிக்கையை துரிதப்படுத்தினர். அறிவியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் புகார்தாரரின் பேரிலே ஆரம்பிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்த மெயில் ஐடி மற்றும் அலைபேசியை ட்ராக்கிங் செய்திருக்கின்றனர். அப்பொழுது, அந்த மெயில் ஐடி மற்றும் அலைபேசியை தினேஷ் என்ற நபர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

உடனடியாக, தினேஷின் இருப்பிடத்தை ட்ராக்கிங் செய்த சைபர் கிரைம் போலீசார் அவனை நெருங்கினர். அப்போது அந்த நபர் டி எஸ் பேங்கிங் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் ஸ்கேமினை நடத்தி வருகின்ற இடத்திற்கு சென்ற போலீசார், தினேஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்பொழுது தினேஷ் அரங்கேற்றிய மோசடிகள் தனிப்படை போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. பொறியியல் பட்டதாரியான தினேஷ், கிரெடிட் கார்டு சேல்ஸ்மேனாக பணியாற்றியுள்ளார். கடும் நெருக்கடியில் இருந்த தினேஷ், பின்னர் கிரெடிட் கார்ட் வேண்டுவோருக்கு கிரெடிட் கார்ட் பெற்றுத்தர நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நிறுவனத்தை ஆரம்பித்து கிரெடிட் கார்டுபெற்று தந்து வந்த தினேஷ், தொழிலில் பெரும் லாபம் இல்லாததால் மோசடியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். 

அதன் அடிப்படையில் ஐந்து பெண்களை பணிக்கு நியமித்து மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறார். அதாவது வாடிக்கையாளர்களுக்கு அலைபேசியில் அழைத்து லோன் வேண்டுமா? கிரெடிட் கார்டு வேண்டுமா? என பெண்களை வைத்து கேட்டுள்ளார். அப்போது, கார்டு வேண்டும் என்று சொன்னால் உடனடியாக அந்த கால் தினேஷுக்கு மாற்றப்படும். தங்களின் நிறுவனத்தின் ஊழியர் இனி லோன் தொடர்பான நகர்வுகளை பார்த்துக்கொள்வார் என்று பெண்கள் தெரிவிக்க, வாடிக்கையாளர்களை தினேஷ் நேரடியாக கையாண்டுள்ளார்.

அப்போது, தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் தினேஷ், அதனை வைத்து ஆன்லைன் அப்பிளிகேசனில் லோன் அப்ளை செய்கின்றான். அந்த ஆவணங்களை வைத்து அக்கவுண்டையும் ஓபன் செய்கின்றான். செயலி மூலம் பெறப்படும் லோனை அந்த வங்கி கணக்கில் வரவு வைக்கிறான். பேங்கில் அக்கவுண்டு ஓபன் செய்யப்படும்போது அந்த வங்கி கணக்கில் தினேஷின் கையில் இருக்கின்ற அலைபேசி நெம்பர் மற்றும் தினேஷால் ஆரம்பிக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்கினை இணைத்துவிடுகிறான். அவ்வாறு இணைக்கும்போது வங்கி கணக்கில் பெயர் ஆவணங்களை தந்தவரின் பெயரில் இருந்தாலும், அதன் மெயில் அக்ஸஸ் ஓடிபி நெம்பர் வருவதெல்லாம் தினேஷ் கையில் இருக்கின்ற போனுக்குத்தான்.

அப்போது லோன் , கிரிடிட் கார்டு அப்ளை செய்தால் உடனடியாக பணம் கிரிடிட் ஆனவுடன், தனது சொந்த அக்கவுண்டுக்கு தினேஷ் மாற்றி பணத்தை எடுத்துள்ளார். இது ஆவணங்களை தந்த நபர்களுக்கு தெரியாது. பேங்கிலிருந்து வங்கி பாஸ்புக், ஏ டி எம் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் ஏதேனும் வந்தாலும் கொரியரில் இருந்து தினேஷ் தந்திருக்கும் அலைபேசிக்கு அழைப்பதனால், பார்சலை வீட்டின் முகவரில் தர வேண்டாம் என்றும், தான் நேரடியாக பெற்று கொண்டு செல்வதாகவும் தெரிவித்து தினேசே நேரடியாக சென்று பார்சலை பெற்று உண்மை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செல்லாமல் தடுத்திருக்கிறார்.



இப்படி பலே திருட்டு வேலைகளில் ஈடுபட்ட தினேஷ் நடத்துகின்ற கம்பெனியை தணிக்கை செய்த சைபர் கிரைம் தனிப்படை போலீஸார், 8 மொபைல் போன்கள், 26 சிம் கார்டுகள், 11 பேன்கார்டுகள், 12 ஆதார் கார்டுகள், 1 வாக்காளர் அட்டை, போலியான வாடகை ஒப்பந்தப்பத்திரம், ஐசிஐசிஐ டேக் பில் 16, சுமார் 6000 வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள், Documents received from customers - 1 bunch, Intel icore5 CPU- 1, and other document உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.



கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

அதன்படி, தினேஷ் பலரிடம் அவர்களுக்கே தெரியாமல் நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுபோன்று மோசடி நடைமுறையில் மாட்டி பணத்தினை இழந்திருந்தால் அவர்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தர வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று லோன், கிரெடிட் கார்டு உடனடியாக பெற்று தருவதாக அழைத்தால் அவர்களிடம் விலை மதிப்பற்ற ஆவணங்களை தந்துவிடக்கூடாதென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து வழக்கை திறம்பட கையாண்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...