ஊட்டியில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ஆன்லைனில் டிக்கெட் விற்பனை - ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் உதகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைனில் 2 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று 10 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்த 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் திருமணத்திற்காக உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் அதே தனியார் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை கடந்தசில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.



இந்த டிக்கெட் விற்பனை சம்பவம், திருமண வீட்டாருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அது குறித்து மண்டப நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், திருமணத்திற்கு மட்டும்தான் மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இசை நிகழ்ச்சி குறித்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மண்டப நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், மண்டபத்தின் பெயரை கூறி மோசடி நடைபெறுவதை உறுதி செய்த நிலையில், அந்த கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து, ஆன்லைன் டிக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மொத்தமாக 50 டிக்கெட் தேவைப்படுவதாக கூறினர். எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர்கள் பதில் அளித்து உள்ளனர். ஆனால், ஆன்லைனில் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் நேரில் வந்து டிக்கெட்டுகள் கொடுத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் மண்டப நிர்வாகத்தினர் அந்தக் கும்பலிடம் தெரிவித்து உள்ளனர்.



இதை நம்பி நேரில் வந்த அந்த கும்பலை மண்டப நிர்வாகத்தினர் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து ஊட்டி மேற்கு காவல்நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில், மோசடியில் ஊட்டியை சேர்ந்த சித்தார்த் (வயது 24), சரவணன் ரூகேஷ் பாபு (35), ஜாக்சன் (30), மோனிஷ் குமார் (20), ஆகிய 4 பேர் ஈடுபட்டதும் தலா 500 ரூபாய் என சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டை ஆன்லைனில் விற்று பணம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.



இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...