கோவையில் வேளாண்‌ கருவிகள்‌ மற்றும்‌ தொழில்நுட்பங்கள்‌ செயல் விளக்க விழா

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண்‌ கருவிகள்‌ மற்றும்‌ தொழில்நுட்பங்கள்‌ செயல்விளக்க விழாவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, 2022-23-ஆம்‌ ஆண்டுக்கான வேளாண்‌ கருவிகள்‌ மற்றும்‌ தொழில்நுட்பங்கள்‌ செயல்விளக்க விழாவினை இந்திய வேளாண்‌ ஆராயச்சிக்‌ கழகத்துடன்‌ இணைந்து கல்லூரி வளாகத்தில்‌ கடந்த 14ம் தேதி நடத்தியது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர் கீதாலெட்சுமி‌, விழாவினைத்‌ துவக்கி வைத்து, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்ட பண்‌ணைக்கருவிகள்‌ மற்றும்‌ சாதனங்களை விவசாயிகள்‌ பயன்படுத்த பரிந்துரை செய்தார்.

இக்கல்லூரியில்‌ செயல்படும்‌ அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராயச்சி திட்டங்களான பண்ணைக்கருவிகள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌, விவசாயத்தில்‌ பணிச்சூழலியல்‌ மற்றும்‌ பாதுகாப்பு, வேளாண்‌ மற்றும்‌ வேளாண்சார் தொழிற்சாலைகளில்‌ ஆற்றல்‌ உற்பத்தி, துல்லிய பண்ணைய வளர்ச்சி மையம்‌ மற்றும்‌ ஆராய்ச்சி கூட்டமைப்புத்தளத்தின்‌ திட்டங்களில்‌ கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌ உழவர்களின்‌ பார்வைக்கு வைக்கப்பட்டது.



டிராக்டரால் இயங்கும்‌ செவ்வக வடிவ பாத்தி அமைக்கும்‌ இயந்திரம்‌, கரும்புக்கரணை நடவு இயந்திரம்‌, மக்காச்சோளக்கருது அறுவடை இயந்திரம்‌, காய்கறி விதைகளை விதைக்கும்‌ இயந்திரம்‌, ட்ரோன்‌ தெளிப்பான்‌, தென்னைமரம்‌ ஏறும்‌ கருவி, பருப்பு உடைக்கும்‌ இயந்திரம்‌, தக்காளி /கத்தரி விதை நடும் இயந்திரம்‌, நிலக்கடலை தோல்‌ உடைக்கும்‌ இயந்திரம்‌, சூரிய உலர்த்திகள்‌, வெப்ப எரிவாயு/உயிரிக்கரிம உறபத்திக்கலன்‌கள், காற்று உந்துவிசை அடுப்பு,

தென்னைக்கு வட்ட அகழி நீர்ப்பாசனம்‌, உரப்பாசனம்‌, பசுமைக்குடிலில்‌ காற்றோட்ட அமைப்பு, சொட்டு நீர்ப்பாசனத்தில்‌ காற்று கலந்த பாசனம்‌, நெகிழி நிலப்போர்வை மற்றும்‌ ஆழ்துளைக்‌ கிணறுகளில்‌ நிலத்தடி நீர்‌ செறிவூட்டல்‌ ஆகியவற்றின்‌ செயல்விளக்கம்‌ உழவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில், 520-க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ கலந்துகொண்டு பயன்பெற்றனர்‌.



இந்நிகழ்ச்சியின்‌ நிறைவு விழாவில்‌, வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌, முனைவர்‌ ரவிராஜ்‌, பண்ணைக்கருவிகள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌ வாடகைச்‌ சேவை மையங்களை பயன்படுத்தி விவசாயிகள்‌ தங்களது வேலைகளை காலத்தே செய்து முடித்து பயன்பெற அறிவுறுத்தினார்‌.

வேளாண்‌ விரிவாக்க கல்வி இயக்கத்தின்‌ இயக்குநர்‌, முனைவர்‌. முருகன்‌ பேசுகையில்‌, சிறிய அளவிலான பண்ணைக்கருவிகள்‌ மற்றும்‌ இயந்திரங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள வேளாண் அறிவியல்‌ மையங்களை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தார்‌.

இதனைத் தொடர்ந்து பேசிய பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌. கலாராணி, நெல்‌ சாகுபடியில்‌ உள்ள இயந்திரமயமாக்கல்‌ குறித்து பேசினார். மேலும், விவசாய உற்பத்தியாளர்கள்‌ சங்கத்தின்‌ மூலம்‌ பெரிய அளவிலான பண்‌ணைக்கருவிகளை வாங்கி வாடகைக்கு தருவதன்‌ மூலம்‌ சிறு குறு விவசாயிகள்‌ பலனடைய முடியுமெனக்‌ கூறினார்‌.



பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ தமிழ்‌வேந்தன்‌ பேசுகையில், இவ்விழாவின்‌ மூலம்‌ அறியப்பட்ட தொழில்நுட்பங்களை அவர்களது பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரைக்குமாறு நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்‌. வேளாண்‌ கருவிகள்‌ மற்றும்‌ இயந்திரங்களை அதிக அளவில்‌ பயன்படுத்திய முதல்‌ ஐந்து விவசாயிகளுக்கு பயனீட்டாளர்‌ விருது வழங்கப்பட்டது.

விவசாயிகள்‌ விஞ்ஞானிகள்‌ கலந்துரையாடலில்‌ பங்குபெற்ற விவசாயிகள்‌, இவ்விழா தங்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக இருந்ததாகவும்‌, இதுபோன்ற செயல்விளக்க விழாக்களை மாவட்ட/வட்டார ரீதியாக நடத்த வேண்டுமெனவும்‌ வேண்டுகோள்விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...