நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி போராட்டம் - பரபரப்பு

கோத்தகிரியை சேர்ந்த யாகூப் என்ற மாற்றுத்திறனாளி காந்தி மைதானம் அருகே தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தர்ணா போராட்டம்.


நீலகிரி: தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளி ஒருவர், நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரியில் வசித்து வருபவர் முகமது யாகூப். மாற்று திறனாளியான இவர், கோத்தகிரி பேருந்து நிலையத்திற்கு அருகில் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பேரூராட்சியின் செயல் அலுவலர், இவரது கடையை காந்தி மைதானம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனை நம்பி யாகூப் தன்னுடைய கடையை காந்தி மைதானம் அருகில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடையை மாற்றம் செய்வதற்காக அங்கு சென்று பார்த்த பொழுது தனக்கு ஒதுக்கிய இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.



இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யாகூப் மாவட்ட ஆட்சியரை அணுகி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே படுக்கை விரிப்பு மற்றும் கம்பளியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி சமாதானம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தொடர்பு கொண்டு கடை கிடைப்பதற்கு உண்டான வழி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் யாகூப் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

இச்சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...