டாப்சிலிப் வனப்பகுதி அருகே மீண்டும் கிராமங்களில் நுழைந்த மக்னா யானை - பொதுமக்கள் அச்சம்!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வன பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை, ஊருக்குள் புகுந்ததால், விவசாய நிலம் மற்றும் பொதுமக்களை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு கும்கி யானைகள் மூலம் விரட்டும்பணி நடந்து வருகிறது.



கோவை: டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் இந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து கும்கி யானையான சின்னதம்பி மற்றும் வனத்துறை குழுவினர் உதவியுடன் கடந்த 5ஆம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்தனர்.

பின்னர், பிடிப்பட்ட மக்னா யானையை பொள்ளாச்சி அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.



இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து, மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில், நேற்று இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, உள்ளிட கிராமங்களை கடந்து, தற்போது மன்னூர் ராமநாதபுரம் என சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சென்று கொண்டே இருந்தது.

இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து யானையை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்த நிலையில், தற்போது சூலக்கல் அருகே உள்ள கோவிந்தன் ஊர் என்ற இடத்தில் யானை ஓய்வெடுத்துள்ளதை வனத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.



யானை மீண்டும் அப்பகுதியில் இருந்து பயணித்தால் கிராம மக்களுக்கு அல்லது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாப் ஸ்லிப் கோழிக்கமுத்தியில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தனன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், கோவை மண்டல வன பாதுகாவலருமான ராமசுப்ரமணி மற்றும் மாவட்ட வன மருத்துவர் மனோகரன் யானையை வனப்பகுதியில் விரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை கிராமப்பகுதிகளில் நுழைந்து வீடுகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்துவதற்குள் அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...