யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்தவரிடம் 5.5 லட்சம் மோசடி - வடமாநில மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை!

உக்கடம் பகுதியை சேர்ந்த கருணாகரன், யூடியூபில் வந்த விளம்பரத்தின் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்ற நிலையில் வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து தங்கம், எண்ணெயில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 5.5 லட்சம் பணம் மோசடி.


கோவை: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவரிடம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டுக்கு ஆசை காட்டி 5.5 லட்சம் பணத்தை மோசடி செய்த வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

உக்கடம் அடுத்த ஜி. எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் யூடியூப் மூலம் வீடியோ பார்த்துள்ளார். அப்போது வீடியோவுக்கு இடையே ஒளிபரப்பான விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கின்றார்.

அதில் தங்கம் மற்றும் ஆயிலில் முதலீடு செய்தால், அதனை ஸ்டாக் வைத்து விற்பதற்கு ஏற்ப லாபம் கிடைக்கப்பெறும் என்று விளம்பரப்படுத்தி உள்ளனர். ஆன்லைன் முதலீடு மற்றும் அதனால் கிடைக்கும் லாபம் குறித்தான தகவல்களை அறிந்த அவர், அதில் வந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றுள்ளார்.

Block Rock என்ற அந்த இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன், அதில் சில விவரங்கள் கேட்டிருக்கின்றனர். விவரங்களை பூர்த்தி செய்தவுடன் Block Rock VIP 8826 என்ற, வாட்ஸ்அப் குழுவில் கருணாகரன் எண்ணை இணைத்து விட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த குழுவின் அட்மின் 2 நாள் முதல் 360 நாள் வரை பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக வட்டி தொகை கிடைக்கும் எனவும், இரண்டு நாட்களுக்கு 5.4 சதவிகித வட்டியும், 360 நாட்களுக்கு 1.95 சதவிகிதம் வட்டி தருவதாக ஆசை காட்டியதாக தெரிகிறது.

குறுகிய நாட்களுக்கு கூடுதல் வட்டியும், அதிக நாட்களுக்கு குறைந்த வட்டியும் தருவதாக தெரிவித்ததை நம்பிய கருணாகரன் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுகின்ற அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி 1 லட்சத்திற்கும் மேல் முதல் தடவை முதலீடு செய்து முதலீட்டு தொகை மற்றும் வட்டியுடன் 1,42,512 ரூபாயை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளார்.

பின்னர் Block Rock VIP 8826 வாட்ஸ்அப் குழுவில், நீங்கள் கூடுதல் தொகை முதலீடு செய்தால், உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். ஏற்கனவே கிடைத்த வட்டி தொகையின் காரணமாக அதனை நம்பிய கருணாகரன், தனது 3 வங்கிகளில் இருந்து மொத்தமாக 30 தவணைகளுக்கு மேல் மூன்றே மாதங்களில் 5,49,490 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

மூதலீடு நாட்கள் முடிவடைந்ததும் தனது பணத்தை வட்டியுடன் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த தளத்தில், பலமுறை முயற்சி செய்தும், பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்த நிலையில், உடனடியாக அந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் ஏமாற்றபட்டதை அறிந்து கருணாகரன், மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் அருண்குமார், மற்றும் உதவி ஆய்வாளர் முத்து இருவரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கருணாகரனை இந்த மோசடியில் சிக்க வைத்து பணத்தை சுருட்டியது, வடமாநிலத்தை சேர்ந்த சைபர் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்த யுபிஐ ஐடிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ரு வருகின்றது. இதற்கு முன் இதேபோன்று பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் தர முன்வரலாம் எனவும், குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் வந்து புகார் அளித்தால், விரைவில் இழந்த பணத்தை மீட்க முடியும் என்றும் சைபர் கிரைம் போலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் நடந்த உடனே 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், சைபர் மோசடி கும்பலிடம் ஏமாந்த பணத்தினை மீட்க முடியுமென தெரிவித்திருக்கின்றனர். லாப நோக்க ஆசை வலையில் வீழ்த்தும் மோசடி பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...