கோவையில் பிடிபட்டு 24 மணி நேரமாக லாரியில் சுற்றும் மக்னா யானை!

கோவையில் பிடிபட்ட மக்னா யானையை கடந்த 24மணி நேரமாக வனத்துறையினர் லாரியில் வைத்துச் சுற்றுவதால், அந்த யானை சோர்வுடன் காணப்படுகிறது. இறுதியாக மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடக் கொண்டு செல்லப்பட்ட போது, செய்தியாளர்களுக்கு வனப்பகுதியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தருமபுரி மாவட்டம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலங்களைச் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை கடந்த 5ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் 6ஆம் தேதியன்று விடப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை சேத்துமடை, ஆத்து பொள்ளாச்சி, ராமபட்டினம், ஜலத்தூர் போன்ற பகுதிகளில் புகுந்து உலா வந்த நிலையில், இந்த யானை இடம் பெயர்ந்து கோவையை நோக்கி மதுக்கரையை கடந்து பேரூர் சென்றது.



இந்த யானை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளில் சுற்றி திரிந்த நிலையில், யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு நேற்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் யானையைப் பிடித்தனர்.



இந்நிலையில் யானையை சத்தியமங்கலம் வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு சென்ற போது, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யானையை மீண்டும் பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு மீண்டும் யானையை பொள்ளாச்சி நோக்கி லாரியின் மூலம் கொண்டு வந்தனர்.



இந்த யானையை வால்பாறை-மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான மந்திரிமட்டம் என்னும் இடத்தில் விட வனத்துறையினர் திட்டமிட்டு, யானையை மானாம்பள்ளி வனச் சோதனை சாவடியை தாண்டி வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.



நேற்று கோவையில் பிடிபட்ட யானை 24 மணி நேரமாக, தொடர்ந்து லாரியில் பயணம் செய்ததால் களைப்படைந்த மக்னா யானை மானாம்பள்ளி சோதனை சாவடியை நெருங்கிய போது மயக்க நிலையில் காணப்பட்டது.



மேலும் யானை கொண்டு செல்லப்பட்ட வனப்பகுதிக்குள் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...