கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக விரைவில் போராட்டம்! - கிருஷ்ணசாமி அறிவிப்பு

கருரை சேர்ந்த கும்பல் ஒன்று கனிமவள கொள்ளைக்கு துணை போகிறது. அதனை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விரைவில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.



கோவை: கனிமவள கொள்ளையை தடுக்ககோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது:



மலையோர பகுதிகளான தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் விளைநிலங்களில் ஊடுருவது வழக்கமாகி வருகிறது. கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைநிலங்களை பாதுகாக்க ஒரு ஏக்கர் கம்பி வேலி அமைக்க வேண்டுமானால் விவசாயிகளுக்கு அதிக செலவாகும்.

இதனால், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை உடனடியாக கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதில் சாத்தியம் இருப்பதாக கருதவில்லை. இதுதொடர்பாக அனைத்து விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

கனிமவள கொள்ளையை தடுப்போம் என திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அதனை ஆட்சிக்கு வந்து 2 வருடங்களாகியும் திமுக செய்யவில்லை. கரூரிலிருந்து ஒரு கும்பல் கனிமவள கொள்ளைக்கு துணை போவதுடன் கேரளாவிற்கு செல்லும் லாரிகளில் வசூல் வேட்டை நடத்துகிறது.

கனிமவள கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர். மாநில அரசு கரூர் கோஷ்டியினரின் அட்டூழியத்தை ஒழிக்க வேண்டும். சொந்த நிலத்தில் மண் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரிகள் கனிமவள கடத்தலை கண்டுகொள்வதில்லை. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக வசூல் செய்பவர்களின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். அரசு ஆதரவு இல்லாமல் இந்த கனிமவள கொள்ளை நடக்காது. விரைவில் கனிமவள கொள்ளையை தடுக்க கோரி அனைத்து விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய குளங்களில் இருக்க கூடிய வண்டல் மண்ணை சொந்த நிலத்திற்கு எடுத்து செல்ல கட்டணம் வசூலிக்க கூடாது.

இவ்வாறு, கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...