உடுமலையில் அறிவியல் திருவிழா - மாணவர்களுடன் உரையாடிய இஸ்ரோ விஞ்ஞானிகள்!

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உடுமலை அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் மாணவ மாணவிகளுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மற்றும் கமலம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் அறிவியல்சார் பயிற்சி பட்டறை ஆகியவை கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்டது.



உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்புரை நிகழ்த்தினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி, கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சஞ்சீவ், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

தமிழக தமிழாசிரியர் கழக மாநில மதிப்பியல் தலைவர் வஞ்சிமுத்து, உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் தலைவர் உடுமலை அமிர்தநேயன், உடுமலை வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடம் நமது இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, தமிழக விஞ்ஞானிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும். நாம் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கும் விண்வெளி துறையின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

அப்போது, அவர் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த ஆறு பள்ளி மாணவர்களை வரும் மார்ச் 15ஆம் தேதி விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்ல உறுதியளித்து, அதற்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழகம் செய்யும் என்று கூறினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் சண்முகசுந்தரம் எம்.பி, ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுமையான அறிவியல் படைப்புகளை வைத்திருந்த கண்காட்சியினை துவக்கி வைத்து, மாணவர்களோடு அறிவியல்சார் கருவிகளைப் பற்றி கலந்துரையாடினார்.

*இஸ்ரோ விஞ்ஞானிகள் - மாணவர்கள் கலந்துரையாடல்*

பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இணை இயக்குனர் வளர்மதி, ரிசாட் -1 என்ற செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக இருந்து தமிழக அரசின் முதல் அப்துல் கலாம் விருதினை பெற்றவர். அவர் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்தும், மாணவர்கள் தங்களை பள்ளி பருவத்திலே அறிவியல் சார் செயல்பாடுகளில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், நமது இந்திய நாட்டின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்று கலந்துரையாடினார்.

அப்போது, மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு வளர்மதி பதில் அளித்தார். குறிப்பாக, செயற்கைக்கோள் வடிவமைப்பு, செயற்கைக்கோள் செயல்படும் விதம், ஆகியவை பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கான பதில்களை வளர்மதி மாணவர்களுக்கு கூறினார்.

இதனைத் தொடர்ந்து, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் சசிகுமார், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராக்கெட் பற்றியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதேபோல அடிப்படை அறிவியலை ஒவ்வொரு மாணவரும் பள்ளி பருவத்தில் இருந்தே கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர், ராக்கெட் குறித்தும், ராக்கெட் ஏவுதல் குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சசிகுமார் பதில் அளித்தார். தமிழில் அறிவியலை பரப்புவதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

அப்போது பேசிய அவர், ஒரு விஞ்ஞானியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு எழுத்தாளராக நான் பெருமைப்படுகிறேன். ஆகவே நமக்குத் தெரிந்த கருத்துக்களை நமது தாய் மொழியிலேயே நமது பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இப் புத்தகங்களை எழுதி இருக்கிறேன் என்றார். புத்தகங்களைப் பற்றிய கலந்துரையாடலும் அப்போது நடைபெற்றது.

இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு பகல் நேர வானியல் என்ற தலைப்பில் பத்துக்கும் மேற்பட்ட செயல்பாடுகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்க்கும் படியான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நிறைவு விழாவிற்கு வருகை தந்தவர்களை அரசு மேல்நிலைப்பள்ளி பூலாங்கிணறு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்று பேசினார். கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தா தலைமை வகித்தார்.

விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி, அறிவியலும் வாழ்வியலும் என்ற தலைப்பில் அறிவியல் கருத்துரை வழங்கினார். எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் இமானுவேல் நெல்சன், முனைவர் ஸ்ரீதர் ராமமூர்த்தி, உடுமலை வாசவி கிளப் நிர்வாகி ஸ்ரீஹரி, அசோகன், கண்டி முத்து, செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணா கலந்து கொண்டு பள்ளி பருவத்திலே மாணவர்களுக்கு இது போன்ற திருவிழா நடைபெறுவது அவர்களுக்கு அறிவியல் துறையிலே ஈடுபாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதாக இருக்கும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் உறுப்பினர்கள் ஹரிணி மதுஸ்ரீ சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.



அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் பரிசோதனைகள் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொலைநோக்கி, பைனாகுலர், சூரிய கடிகாரம், மடிப்பு நுண்ணோக்கி மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.



தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளிலே வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுமார் 400க்கும் மேற்பட்ட உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம், பழனி பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் இந்த அறிவியல் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...