பொள்ளாச்சி சாலையில் நள்ளிரவில் சண்டையிட்ட காட்டுயானைகள் - அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்!

கோவை பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் நள்ளிரவில் காட்டு யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டதால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளும் அச்சமடைந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், நள்ளிரவில் காட்டு யானைகள் சண்டையிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கேரள மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்த சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாகவே கோவை பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உலா வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் இந்த காட்டு யானை, ஆழியார், வால்பாறை சாலை பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.



இந்த நிலையில், கடந்த வாரத்தில் நவமலை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த அந்த யானை, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அருள்ராஜ் மற்றும் தியாகராஜ் இருவரின் இரண்டு சொகுசு கார்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால், ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்பு மற்றும் வால்பாறை சாலையில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி உலா வரும் ஒற்றைக்காட்டு யானை, இரவு நேரத்தில் மீண்டும் வனத்தைவிட்டு வெளியேறி வால்பாறை சாலையில் சுற்றித்திரிந்துள்ளது.



அப்போது, வால்பாறை சாலையில் எதிரே வந்த மற்றொரு காட்டு யானையை கண்ட சுள்ளி கொம்பன் யானை, அந்த யானையுடன் சண்டையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை சாலையில் நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகளும் நீண்ட நேரமாக நின்றதால் வால்பாறை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் சாலையில் சண்டையிட்டுக் கொண்டு நின்றிருந்த இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதனை அடுத்து சாலையில் நீண்ட நேரமாக வரிசையில் நின்றிருந்த வாகனங்கள் வால்பாறை நோக்கிச் சென்றது.



மேலும், வனத்துறையினர் தொடர்ந்து இந்த சுள்ளிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. இதனால், ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு பகலாக தொடர்ந்து முழுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...