பல்லடத்தில் புதிய மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டும் திமுக நகர செயலாளர்? - பொதுமக்கள் புகார்!

பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் புதிய நவீன மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புதிய மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை திமுக நகரச் செயலாளர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் 8 வது வார்டு பச்சாபளையத்தில், தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டன.

இந்த மின் மயானம் அமைக்கப்படுவதற்கு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், அரசு பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளதாக கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நவீன எரியூட்டு மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்து, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பச்சாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



இதில், கடந்த 9 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், பணி தொடர்ந்து நடைபெற்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.



மேலும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பல்லடம் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் நகர செயலாளருக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மின்மயானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...