கோவையில் மார்ச் 5ஆம் தேதி தொழில் பாதுகாப்பு மாநாடு - எம்பி பி.ஆர்.நடராஜன் அறிவிப்பு

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் மார்ச் 5 ஆம்தேதி தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜிவ் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.



கோவை: கோவை காட்டன் கார்ப்ரேசன் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் மார்ச் 5 ஆம்தேதி தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜிவ் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.



இம்மாநாட்டின் நோக்கங்கள் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மூத்த தொழில்முனைவோர் டி.பாலசுந்தரம் ஆகியோர் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது:

ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்களும், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழில் பாதுகாப்பு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ள அம்சங்களில், நூற்பாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான பஞ்சு விலை நிலையற்றதாக உள்ளது.

இதனால், ஏற்றுமதிக்கான ஆர்டரை பெறுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, குறிப்பிட்ட 4 மாத காலத்திற்காவது, நிர்ணயிக்கும் விலைகள் நிலையானதாக, கட்டுக்குள் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். காட்டன் கார்ப்ரேசன் இந்தியா அமைப்பை ஒன்றிய அரசு வலுப்படுத்த வேண்டும்.

அதேபோல, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விநியோகிப்பதைப்போல், பருத்தி அறுவடைக் காலத்தில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து பற்றாக்குறை காலத்தில் விநியோகம் செய்ய வேண்டும். அதற்காக காட்டன் கார்ப்ரேசன் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.

இதேபோல, வார்ப்படம், மோட்டார் பம்ப் போன்ற தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரசு தனிக் கவனம் மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிற குறு, சிறு தொழில்களுக்கென தனி அமைச்சகம், தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.

தென்னை விவசாயத்தைச் செழிக்க வைத்திட, பாமாயில் இறக்குமதியை மாநில அரசு நிறுத்திவிட்டு, தேங்காய் எண்ணெயை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்க வேண்டும். விசைத்தறி தொழில்களைப் பாதுகாக்க மானிய மின்சாரம் 1500 யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுடன் போடப்படும் ஒப்பந்தங்கள் சட்டரீதியான ஒப்பந்தமாக மாற்றப்பட வேண்டும்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், இதனையொட்டிய என்பிஏ 90 நாட்கள் என்பதை 180 நாட்களாக அதிகரித்திட வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனை மாநில, ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக மூத்த தொழில்முனைவோர் டி.பாலசுந்தரம் பேசியதாவது:

கொரோனா தொற்றுக்குப் பிறகு தொழில் நிலை மாறும் என நினைத்தோம். ஆனால், அப்படியான எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆர்டர்கள் இல்லை, ஜிஎஸ்டி பிரச்சனை, நிதிப்பிரச்சனை தற்போது மூலப் பொருள் விலை உயர்வு என குரு, சிறு தொழில்கள் பெரும் சவாலை எதிர்கொண்டு இருக்கிறது.

ஒன்றிய அரசின் கணக்கின்படியே குறு, சிறு தொழில்கள் 49 லட்சம் தொழில்களும், இதில், 99 லட்சம் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். இதில், 50சதவிகிதம் கிராமப்புறங்களில் இந்த தொழில்கள் உள்ளதும், இதில், 33 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். 16 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்கள். நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 33 சதவிகிதம் இந்த சிறு குறு தொழில்கள் பங்களிப்பைச் செய்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறு, சிறு தொழில்கள் இப்போது பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாகத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சரி செய்திட வேண்டும். தொழிலாளர்களுக்குத் தங்குமிடங்கள், சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதற்கான சிறப்புத் திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழில்கள் குறு, சிறு தொழில்களுக்கு ஜாப் ஆர்டர்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நான்கு ஆண்டுகளாக ஜிஎஸ்டி பிரச்சனை. தீர்க்கப்படாமலே உள்ளது, இதனை சரி செய்ய வேண்டும். இதுபோன்ற முக்கியமான அம்சங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...