கோவையில் கூடுதல் லாபம் தருவதாகக் கூறி ரூ.71 லட்சம் மோசடி - முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை!

கோவையில் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் லாபம் தருவதாகக் கூறி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஃபெலிக்ஸ் பெர்னார்டு என்பவரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள், முக்கிய ஆவணங்கள், வங்கியில் அடகு வைத்திருந்த 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பிரதீப். இவரது கல்லூரி நண்பரின் தம்பி தினேஷ் மற்றும் ஃபெலிக்ஸ் பெர்னார்டு ஆகிய இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது தாங்கள் Trade quint wealth management services என்ற தொழிலை நடத்தி வருவதாக தெரிவித்து, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் தருவதாகக் கூறியுள்ளனர்.

முதலீடு செய்த பணத்திற்கு காசோலை மற்றும் ஒப்பந்த உடன்படிக்கை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதீப் ராஜ், தன் தாயார் மருத்துவ செலவுக்காக பணம் வைத்திருப்பதனை அறிந்த தினேஷ் மற்றும் பிலிப்ஸ் இருவரும், அந்த பணத்தை தொழிலில் முதலீடு செய்ய வற்புறுத்தி இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் மூன்று லட்சம் ரூபாயை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி பிரதீப் தொழில் முதலீடாக தினேஷ் மற்றும் ஃபெலிக்ஸ் ஃபெர்னார்டிடன் தந்திருக்கின்றார். இந்த நிலையில் காசோலைகளும், பதிவு செய்யப்படாத ஒப்பந்த பத்திரத்தையும் தினேஷ், ஃபெலிக்ஸ் பெர்னார்டு ஒப்படைத்திருக்கின்றனர்.

பின்னர், மூன்று மாதத்துக்கான முதலீட்டு லாபத்தை ரூபாய் 15 ஆயிரத்தை தந்திருக்கின்றனர். அப்பொழுது தங்கள் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்த அவர்கள், முதலீட்டின் லாப பணத்தில் தாயாரின் மருத்துவ செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், 5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வற்புறுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தன் தாயாரை பார்த்துக் கொள்ள கூடுதலாக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கட்ட முன் வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு இரண்டு மாத முதலீட்டின் லாபமாக 25 ஆயிரம் ரூபாய் தரப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் பிரதீபுக்கு முதலீட்டு தொகை லாபமும் அல்லது முதலீட்டு பணமும் தரவே இல்லை. தொடர்ந்து இழுத்து அடித்து வந்திருக்கின்றனர்.

அப்போது பிரதிப்பிடன் சிலர் தினேஷ் மற்றும் ஃபெலிக்ஸ் பெர்னார்டு தங்களிடமும் ஏமாற்றியதாக தெரிவித்திருக்கின்றனர். அப்போதே பிரதிப்புக்கு, தினெஷ் மற்றும் ஃபெலிக்ஸ் பெர்னார்டு இருவரும் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது.

மொத்தம் 12 பேரிடம் 71 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அவர்கள் ஏமாற்றி பணத்தை சுருட்டியது உறுதியானது. பிரபல வங்கியில் வேலை செய்வதாக தங்களை காட்டிக் கொண்டு, உடன்படிக்கை பத்திரம், காசோலை போன்றவற்றை தந்து ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பண மோசடி ஈடுபடுவது இவர்களின் வாடிக்கை என்பது தெரிய வந்தது.



அதன் அடிப்படையில், சிட்டி கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தினேஷ் மற்றும் ஃபெலிக்ஸ் பெர்னார்டு இருவரையும் போலீசார், கைது செய்ய முற்பட்ட பொழுது இருவரும் தலைமறைவாகினர். முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்த நிலையில் ஃபெலிக்ஸ் பெர்னார்டுவுக்கு முன் ஜாமின் கிடைக்கும் முன்னரே போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், இரண்டு செல்போன்கள்,6 முக்கிய ஆவணங்கள், வங்கியில் அடகு வைத்திருந்த 15 பவுன் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெலிக்ஸை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கின் முக்கியமான நபரான தினேசை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...