ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம்..! - ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்காக திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் ஓட்டு முதல் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகித்துவருகிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதாவது:

தேர்தல் காலத்தில் கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளார்கள். ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. மறைந்த எனது மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன். இங்கு அமைச்சர் முத்துசாமியோடு சேர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு பெருமையாக இருக்கிறது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியாதவராக இருந்தாலும் அனுபவத்தில் பல மடங்கு மூத்தவர். அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்வேன். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. தேர்தல் பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றி. கமலஹாசன், கனிமொழி போன்ற தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் திரண்டனர்.

கடுமையான வேலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...