வனவிலங்களுக்கு உணவளிக்காதீர்..! - எச்சரிக்கும் வனவிலங்கு நல ஆர்வலர்கள்

வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு உணவளிப்பதாகக் கூறி இயற்கைக்கு மாறான உணவுகளை மனிதர்கள் கொடுப்பதால் அவற்றின் வாழ்வியலில் சிக்கல் ஏற்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கோவை: உலகில் வாழும் ஒவ்வொறு உயிர்களுக்கும், தங்களின் வாழ்வியலுக்கென தனி ஃபார்முலா வகுக்கப்பட்டு அதனடிப்படையில் வாழ்ந்து வருகின்றன. அப்படி ஒரு ஃபார்முலாவில் மாற்றம் ஏற்பட்டால் வாழ்க்கையே தடுமாற்றத்துக்கு உள்ளாகிவிடுகின்றன. அந்த உயிரினங்களின் வாழ்வியலே மாறி அழிவை நோக்கியே நகரும். அதனடிப்படையில் உயிர்கோலத்தில் பெரும் சவால்களை சந்தித்திருக்கின்ற ஜீவன்கள்தான் இந்த வனவிலங்குகள்.



மாறும் வாழ்வியல் நடைமுறை... ரணமாகும் வன விலங்குகள்

குறிப்பாக மலைப்பாதையில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சாலை ஓரமாக அமர்ந்திருக்கின்ற குரங்குகள், மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவளிக்கின்றனர். குரங்குக்கு ஏற்ற பழங்களோ அல்லது அதன் உடல்வாகு ஏற்றவாறான உணவுகளை கடந்து முறுக்கு, சிப்ஸ், கேக் போன்ற நொறுக்கு தீனியும் குரங்குகளுக்கு உணவாக தருகின்றனர்.

பசியோடு குரங்குகள் தவிக்கிறது என்ற எண்ணத்தில் அந்த குரங்குகளுக்கு தரப்படும் உணவு, அவற்றிற்கு விஷம் என்றால் அது மிகை அல்ல. ஏனென்றால் குரங்கு முதல் அனைத்து வனவிலங்குகளும் இயற்கையில் கிடைக்கும் உணவுகளையே காலம் காலமாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. அதற்கு மாறாக, மனிதர்களால் தயாரிக்கப்படுகின்ற உணவை உட்கொண்டால், வாழ்வியலில் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன.



இதுகுறித்து வனவிலங்கு உயிரியல் ஆர்வலர் சதீஷ் கூறியதாவது:

மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து உணவைப் பெற்ற வனவிலங்குகளின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதன் விளைவாக நோய் தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. உணவைத் தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் அந்த நோய்களை கடத்துகின்றன.

மனிதர்கள் கொடுக்கும் உணவுகளால் கவரப்படும் இந்த காட்டுயிர்கள், பல நேரங்களில் சாலைகளில் காத்திருக்கிறன்றன. குறிப்பாக, மலைச் சாலைகளில் இந்த காட்டுயிர்கள் விபத்தில் சிக்கி மாண்டு போகின்றன. பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரத்தில் போக்குவரத்து குறைந்த பிறகு மான்களும் சாலை ஓர உணவுகளை நாடி வந்து விபத்தில் உயிரிழக்கின்றன. சில சமயங்களில் இந்த மான்களையும், குரங்குகளையும் பின் தொடரும் சிறுத்தைகளும் இறக்க நேரிடுகிறது, என்றார்.



சிதையும் உணவு சங்கிலி ... சீரழியும் வன விலங்குகள்

காட்டுயிர்கள் தானாக காடுகளில் இரை தேடும் வரை எந்த சிக்கலும் இல்லை. அவை அவ்வாறு உணவு தேடுவதன் மூலம் காட்டை வளம் பெறச் செய்கின்றன. பறவைகளும், தாவர உண்ணிகளும், காய்களையும் பழங்களையும் உண்டு எச்சத்தின் மூலமாக விதைப்பரவல் செய்யவேண்டியவை. அந்த விதைகளுக்கு கூடுதல் முளைப்புத் திறனும் உண்டு. காடு முழுக்க அலைந்து திரியும் இந்த உயிரினங்களால் காட்டின் பல்வேறு இடங்களும் வளம் பெருகி, இயற்கை சமநிலையுடன் பாதுகாக்கப்படும்.

குரங்குகள் மரங்களின் உச்சியின் அமர்ந்து காய்களை உண்ணும்போது, தவறி விழும் காய்களை மான்கள் உண்கின்றன. இருவாச்சியின் எச்சத்தில் உருவாகும் அத்தி மரம் அணில்களுக்கு வாழிடம் ஆகிறது. யானையின் சாணத்தில் உப்பை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை மூலம் மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் பூக்களை கனியாக்குகிறது. இன்னும் நாம் அறியாத, ஆயிரம் ஆயிரம் இயற்கை சுழற்சியினை, பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டையும், சோளக்கருதையும் வாங்கி உணவாகக் கொடுத்து ஜீவகாருண்யம் என்ற பெயரால் காட்டை நாசம் செய்வது எப்படி சரியாக இருக்கும் ?

நீங்கள் செய்வது உதவி அல்ல..தொந்தரவு..

கரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த சமயத்தில் யாரோ ஒருவர், ஒரு வண்டி நிறைய வாழைப்பழங்களை வாங்கி, காடுகளில் உள்ள குரங்குகளுக்கு கொடுத்தது, சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியானது. அவரை எல்லா ஊடகங்களும் பாராட்டின. காட்டுயிர் பேணலையும், ஜீவகாருண்யத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என நினைக்கிறன். காட்டுயிர்களுக்கு தயவு செய்து உணவைக் கொடுக்காதீர்கள். அதுவே காடுகளுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...