உடுமலை நகராட்சி அலுவலகத்தில் கேட்பாரற்று கிடக்கும் ஆவணங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

உடுமலை நகராட்சியின் பழைய அலுவலகத்தில் பொதுமக்களின் ஆவணங்கள், கேட்பாரற்று கிடப்பதாகவும், இதனை மர்ம நபர்கள் கைப்பற்றி முறைகேட்டில் ஈடுபடும் அபாயம் உள்ளதால், அதனை முறையாக அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் ஆவணங்கள் கேட்பாரற்று கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடுமலை நகராட்சியின் சார்பில் பிறப்பு, இறப்பு சான்று, வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, ஆதார் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தகுந்த ஆவணங்களுடன் சென்று விண்ணப்பங்கள் அளித்து பொதுமக்களும் சேவைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.



இந்த சூழலில் பொதுமக்களிடம் பல்வேறு சேவைகளுக்காக பெறப்பட்ட ஆவணங்கள், பில் புக்குகள் உள்ளிட்டவை பாதுகாப்பு இல்லாமல் பழைய நகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறப்பகுதியில் கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் தனிமனித பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்படுகின்ற சேவைகளை உடுமலை நகராட்சியின் மூலமாக பெற்று வருகின்றோம். ஒவ்வொரு சேவையை பெறுவதற்கும் குறிப்பிட்ட சில ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டிய உள்ளது.

அதை முறைப்படி கொடுத்து எங்களுக்கு தேவையான அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். இந்த சூழலில் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தேர்தல் ஆணைய படிவங்கள், ஆதார் மற்றும் ரேஷன் அட்டை நகல், பிறப்பு, இறப்பு சான்று படிவங்கள், பில்புக்குகள், வாக்காளர் பட்டியல், ரசீதுகள் போன்ற பராமரிக்க வேண்டிய கோப்பு ஆவணங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.

அவை அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே காற்றிலும் பறந்து வருகிறது. எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் தனிமனித ஆவணங்களை கேட்டவுடன் பொதுமக்கள் எதை பற்றியும் யோசிக்காமல் உடனடியாக ஒப்படைப்பதற்கு காரணம் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான்.



ஆனால், உடுமலை நகராட்சியில் நிலைமை தலைகீழாக உள்ளது. கேட்பாரற்று திறந்த வெளியில் கிடக்கும் ஆதார், ரேஷன் கார்டில் உள்ள முழு முகவரி, புகைப்படத்துடன் கூடிய தேர்தல் ஆணைய படிவங்களால் தனிமனித பாதுகாப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மர்ம ஆசாமிகள் இந்த ஆவணங்கள், புகைப்படத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக முறைகேடான செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதற்கும் பயன்படாத கோப்புகள் மற்றும் ஆவணங்களை தீயிட்டு எரிக்க வேண்டும் அல்லது எந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும்.

இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் ஏழை, எளிய பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகராட்சி அலுவலகத்தில் கேட்பாரற்று போடப்பட்டு இருக்கும் ஆவணங்களை முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...